free website hit counter

சொத்து சேர்ப்போம் : உலகப் புத்தக நாள் 2024

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!

உங்களில் யாரேல்லாம் வீட்டில் சிறிய நூலகத்தை உருவாக்கி வருகிறீர்கள்; அப்படியாயின் இன்று அவற்றை கொண்டாடவேண்டிய நாள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் திகதி உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட இத்தினம் யுனெஸ்கோவுடன் இணைந்து பல அமைப்புக்களும் மற்றும் தன்னார்வளர்களும் வெற்றிகரமாகக் கொண்டாடிவருகின்றனர். சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் புத்தக காப்புரிமைக்கும் முக்கியவத்தும் அளிக்கப்பட வேண்டும் என யுனேஸ்கோவுக்கு பரிந்துரை செய்யப்பட்டதால் இத்தினத்திலே உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நம்மில் பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருப்போம். புத்தகப்பிரியர்கள் அல்லாதவர்களையும் அத்திரைப்படம் வாசிக்கத்தூண்டியது. இதுபோன்ற புத்தகங்கள் நிறைய இருந்தாலும் கடந்தாண்டு பெரிதும் பேசப்பட்ட  புத்தகங்களில் ஒருசில புத்தகங்களை பார்ப்போம்.

 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நாவலுக்கான விருதை வென்ற 'நீர்வழிப் படூஉம்' எனும் புத்தகம்  தமிழகத்தைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட எழுத்தாளர் தேவிபாரதி எழுதியுள்ளார்.

நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என நீர்வழிப்படூஉம் அர்த்தப்படுகிறது.  ஈரோட்டுக்கு அருகிலுள்ள உடையாம்பாளையம், நாச்சிபாளையம் போன்ற ஊர்களை மையமாக கொண்டு  குடிநாசுவர்கள் எனப்படும் நாவிதத்தைத் தொழிலாகக் கொண்ட மூதாதைய மக்களின் கதையாக விரிகிறது. அழிந்துபட்ட கிராமத்தின் மனிதர்களின் உளவியல் சிக்கல்களையும் சமூக பின்னனிகளையும் மனதில் ஆழமாக பதியச்செய்யும் நடையில் இப்புத்தகம் செல்வதாக குறிப்பிடப்படுகிறது. 

அடுத்து கோபல்ல கிராமம். ஒரு கிராமம் எப்படி நாகரீக வளர்ச்சி அடைகிறது என்பதை ஒரு கதையின் ஊடாக வரலாற்றை சொல்லும் புத்தகமாக கி. ராஜநாராயணன் எழுதியுள்ளார். இந்தியாவில் மன்னர்கள் ஆட்சிகள் முடிவடைந்து ஆங்கிலேயர்கள் படையெடுக்கும் காலக்கட்டத்தில் ஒரு சிறு கிராமத்திலிருந்து குடும்பமாக பயணித்து மற்றுமொரு இடத்தை கண்டறிந்து அங்கு குடியெறிவதை விவரிக்கும் இந்நாவல் ஒரு காட்டை அழித்து ஒரு ஊரை உருவாக்கியது எப்படி?; அதற்கான வழிமுறைகளை எப்படி கையாண்டனர் என ஒரு பாட்டி கதை சொல்லலை போல் செல்கிறது. 

2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை இலங்கையைச் சேர்ந்த ஷெஹான் கருணாதிலகா The Seven Moons of Maali Almeida புத்தகத்திற்காக வென்றிருந்தது அறிந்ததே. உள்நாட்டு யுத்தகாலத்தை மையமாக கொண்டு தன் இறப்புக்கு காரணமானவர்களை 7 நாட்களுக்குள் தேடி புறப்படும்  ஒரு போர்கால புகைப்படக்காரரின் புனைவுக்கதையாக நகர்கிறது.

இதேபோல் கடந்தாண்டுக்கான (2023) புக்கர் பரிசு 'Prophet Song' எனும் ஐரிஷ் நாவலுக்கு கிடைத்துள்ளது. 
இந்தப் புத்தகமும் எதிர்காலத்தில் அயர்லாந்து நாட்டின் உள்நாட்டுப்போர்ச்சூழலில் பாதிக்கப்படும் குடும்பங்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

இந்நாவலை ஐரிஷ் எழுத்தாளரான பால் லிஞ்ச் எழுதியுள்ளார். இது அவரது ஐந்தாவது நாவலாகும். புக்கர் விருதுகளில் தொடர்ந்து போர்ச்சூழல் தாக்கத்தை மையமாக கொண்ட நாவல்கள் தேர்வுசெய்யப்படுவது குறிப்பிடதக்கது.

புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள். அதன் மதிப்பே அதை வாசிப்பதில் தான் உள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction