சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
நம்மை சுற்றியுள்ள உலகத்தை புரிந்து கொள்வதற்கும், அதற்கு எந்தவாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை
தீர்மானிப்பதற்கும் உதவுகிறது நற்சிந்தனை. நம் மூளையை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும் சிந்தனை தான் உதவுகிறது.
நம்மை சுற்றியுள்ள உலகத்தை உணரவும், நமது உணர்வு மற்றும் ஆழ்மனதின் ஆசைகளை கேட்கவும், அதற்கேற்ப பதில் அளிக்கவும் சிந்தனையே உதவுகிறது. மனிதர்களின் அனைத்து உணர்ச்சி பதிவுகளின் ஆதாரமாக இருப்பது சிந்தனை தான். இந்த சிந்தனைக்கும், மனிதர்களின் உடல்நலத்திற்கும் பெரும் தொடர்பு உள்ளது என்கின்றனர்
மருத்துவர்கள்.
நல்ல சிந்தனை உறவு, நட்பு, வாழ்விடம் ஆகியவற்றில் நல்ல பலன்களையும், தவறான சிந்தனை வீடு, பணியாற்றும் இடம், சமூகம் என்று அனைத்து இடங்களிலும் சிக்கல்களையும் தருகிறது. ஒரு தவறான சிந்தனையால் எடுக்கப்படும் முடிவும், 99சதவீதம் தவறாகவே முடிகிறது என்றும் மனிதநேயம், கருணை, சகோரத்துவம் என்று இயல்பாக
நம்மிடம் இருப்பதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமன்றி நேர்மறையான சிந்தனையால் மனஅழுத்தம் குறைகிறது. மனச்சோர்வு குறைகிறது. துயரம் தவிர்க்கப்படுகிறது. இதய ஆரோக்கியம் வலுப்பெறுகிறது. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் உடல்நலத்திற்கும் பெரும் துணையாக நிற்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நேர்மறையான சிந்தனைகள் என்பது நமது
ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கான அடித்தளங்கள் என்பதே உண்மை.
மொத்தத்தில் நமது சிந்தனைகளே நம்மையும் நம் சமூகத்தையும் உருவாக்குகிறது. இந்த சிந்தனைகள் நல்ல சிந்தனைகளாக அமையும் போது, நம்மோடு பிறரையும் உயர்த்துகிறது. எனவே தீய சிந்தனைகளை தவிர்த்து, நல்லசிந்தனைகளோடு வாழ்வது உடலுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் பெருமை சேர்க்கும்.
சிந்தனை என்பது நமது எண்ணங்களின் தொகுப்பான ஒரு வெளிப்பாடு. இதயம், மனம் மற்றும் உடலை சிந்தனைகள் முழுமையாக ஆக்கிரமிக்கிறது. உயிர்வாழ்வில் இருந்து செழிப்பான மனதிற்கு நம்மை மாற்றக்கூடிய ஒரு மனநிலையே சிந்தனை என்றும் கூறலாம். இது நம்மை ஆக்கப்பூர்வமாக செயல்படவும், பதிலளிக்கவும் வழிவகுக்கிறது.
மனிதனின் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் நேர்மறை சிந்தனை என்றும், தீய எண்ணங்கள் எதிர்மறை சிந்தனைகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. நமது எண்ணங்கள் பிறரின் உடலுக்கோ, மனதிற்கோ, தீங்கு விளைவிக்காமல் இருந்தால் அது நேர்மறை சிந்தனை. மாறாக துன்பம் விளைவித்தால் அது எதிர்மறை சிந்தனை.
நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் போது புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம். இனிமையான பாடல்களை கேட்கலாம். தியானத்தில் ஈடுபடலாம்.
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் உரையாடலாம். மனதில் நிறைந்த இனிய நினைவுகளை அசைபோட்டு பார்க்கலாம். இவை அனைத்தும் எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பதற்கான எளிய வழிகள் என்பதும் உளவியல் ஆலோசகர்களின் அறிவுரை.
வாசித்தல், யோசித்தல், கற்றல், விளையாடுதல் உள்ளிட்டவை நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும் வழிகள் என்பதால் அவற்றை தேர்வுசெய்து புதிய உலகை படைக்கலாம். நல்லதே நினை நல்லதே நடக்கும் என்பதே அதனை நமக்கு எளிய முறையில் புரிய வைக்கும் வாக்கியம்.
- வேதா