free website hit counter

கோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யானைகள் இயற்கையின் அற்புதமான உயிரினம். " இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

யானை எனும் ஒரு மிகப் பெரிய விலங்கினத்தின் ஆற்றல், கோவில் வாசல்களில் வெறும் சில்லறைகளுக்காக வீணடிக்கப்படுகிறது எனும் விமர்சனங்களைத் தூக்கியெறியும் எதிர்நோக்காக இருந்தது அவரது கூற்று.

அன்னா போல்மார்க்கின் இயக்கத்தில் உருவான "பெரும் சமூக நாடோடி" ( Big Social Nomad) எனும், சுவீடன் இந்திய கூட்டு முயற்சியாக உருவான ஆவணத் திரைப்படக் காட்சிப்படுத்தலின் நிறைவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உண்மையில் அன்னாவின் அந்தக் கூற்று இந்தியக் கொவில் யானைகள் குறித்த ஒரு முக்கியமான புதிய சிந்தனையாகத் தோன்றியது.

சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் சென்னையில் நடைபெற்ற ஆவணத் திரைப்படவிழாவில் இத்திரைப்படம் காட்சிப்படுத்தப்ட்டது. அந்த விழாவிற்கான முன்னோட்டத் திரையிடலாக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் இடம்பெற்ற காட்சிப்படுத்தலின் பின்னதான உரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். " இந்திய யானைகள் அன்பின் வயப்பட்டவை. ஆக்ரோசம் குறைந்தவை. ஆப்பிரிக்கா யானைகளை விடவும், ஆசிய யானைகள் பொதுவில் மென்போக்கானவை. ஆயினும் இந்திய யானைகளுக்கும், மனிதர்களுக்குமான நெருக்கம், சமய கலாச்சார வழிகளில் சற்று அதிகமாகவே உள்ளதாக உணர்கின்றேன் " என அந்த உரையாடலில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் சொன்னார்.

அவ்வாறான நெருக்கமான நிலையிலும் மேலாக, தெய்வீகத் தன்மையுடன் நோக்கப்படும் இடத்தில், யானைகளுக்கு ஏற்படக் கூடிய அவலங்கள் உறுத்தலாக உள்ளது. யானைகளின் வாழ்விடங்கள் பறிக்கப்படுவதும், அவற்றை அழிக்கமுயல்வதுமான செயற்பாடுகள் கவலை தருகின்றன. இயற்கையின் சிறந்த தலைசிறந்த படைப்பு மனித வளர்ச்சியின் காரணமாக அழிவை எதிர்கொள்கிறது என்ற அக்கறையினை, இன்றைய நவீன இந்தியாவில் யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை “பெரிய சமூக நாடோடி” ஆவணப்படம் முன்வைத்து ஆராய்கிறது.

இந்த எதிர்மறையான போக்கு நிகழாமல் தடுக்க என்ன தேவை மற்றும் என்ன செய்ய முடியும் என்ற முக்கியமான கேள்விகளை இந்தப்படம் எழுப்புகிறது. நிலம் யாருடையது என்ற சிக்கலான பிரச்சினை பற்றிய நுண்ணறிவையும் இது வழங்குகிறது. இந்தியா, அதன் பல பரிமாண கலாச்சாரத்துடன், காட்டு யானைகளின் மையமாக உள்ளது. யானைகள் மீதான அச்சுறுத்தல் வெளிப்படையாகத் தெரிந்தாலும், நாட்டில் அவற்றின் அதிக நம்பிக்கையும் காணப்படுகிறது. இந்த விலங்கு மீது ஆழ்ந்த அன்பை வளர்க்கும் மக்களிடையே, ஆழமாக வேரூன்றிய ஒரு நம்பிக்கை அந்த இனத்தைக் காக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து படம் நகர்கிறது.

 பெலிகன் மீடியாவின் நிறுவனரும் உரிமையாளரும், பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும், Big Social Nomad ஆவணப்படத்தின் இயக்குனருமான அன்னா போல் மார்க் " கோவில் யானைகளாக நிற்கும் அந்த மிகப்பெரிய விலங்கினை நெருக்கமாகக் காணும் குழந்தைகளிடத்தில், இயற்கை மீதும், பிராணிகள் மீதுமான நேசிப்பு அதிகமாகும். அதனை அழித்துவிடாதீர்கள் " என்றார். அவரது கூற்றும் நோக்கும் முக்கியமானது என்பதை, இந்த ஆவணப்படத்தை நோக்கும் போது நீங்கள் உணர்வீர்கள்.

இன்று சர்வதேச யானைகள் தினம் !

படத்தினை பின்வரும் இணைப்பினில் அழுத்தி முழுமையாகக் காணலாம் :

https://vimeo.com/364607029

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula