free website hit counter

அவளும் அவளும் – பகுதி 15

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீட்டிய துப்பாக்கிகள் பயங்காட்டின…
அடுத்த நிமிடங்களில் அவை வெடித்துவிடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேலன் அவற்றையே வெறித்தும் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களில் நிறைந்திருந்த நீர்த் திவலைகளினூடாக துப்பாக்கி ஏந்திய கைகள் சற்று நடுங்குவதைக் கண்டான். ஆச்சரியமாகவிருந்தது. பயங்காட்டும் துப்பாக்கிகளும் பயங்கொள்ளும், அவைகளும் பயத்தில் நடுங்கும் என்பதை முதன் முதலாக நேரில் கண்டு ஆச்சரியங் கொண்டான்.
துப்பாக்கிகள் ஏன் நடுங்கின..

வேறு பல துப்பாக்கிகளின் வெடியோசை அயலில் அதிர்ந்தன. ஏதோ விபரீதம் என வேலன் யோசித்துக் கொண்டிருக்கையில் வாசல் புறமாக நின்றவனின் வாக்கி டோக்கி பெரிதாக இரைந்து ஏதோ சொன்னது.
“கொட்டியா அவா..” என அவன் சத்தமாகச் சொன்னான்.

இப்போது வேலனுக்கு பயங்காட்டிய துப்பாக்கி நடுங்கியது ஏனென்று விளங்கியது. மீண்டும் அதனைப் பாரத்தான். இப்போது அது அவனை நோக்கி நீண்டிருக்கவில்லை. அதன் திசைமாறியிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த முற்றத்திலிருந்த துப்பாக்கி மனிதர்கள் அவசரமாக அங்கிருந்து கலைந்து ஓடினார்கள்.

வேலனும், செல்லாச்சியும், சுற்றி நின்ற வேட்டைக்காரர்களிடமிருந்து விடுதலைபெற்றார்கள். வேலன் மூச்சினை ஆழமாக இழுத்துப் பெருமூச்சாக விட்டான்.
ஒடுங்கிக் கிடந்த செல்லாச்சி ஒலமிட்டு அழத் தொடங்கி விட்டாள். வேலன் அவளைச் சமாதானப்படுத்தி, தைரியமூட்ட முயற்சித்தான். முகத்தை மூடியிருந்த அவளது கைகளைப்பற்றி மெதுவாக விலக்கித் தன்னுடன் அனைத்துக் கொண்டு, அவளது முதுகினை ஆதரவாகத் தடவினான்.

இன்னமும் துப்பாக்கிகளின் சத்தங்கள் கேட்ட வண்ணமேயிருந்தன. வைரவன் வெளிப்புறத்தில் நின்று குரைத்துக்கொண்டேயிருந்தது. காற்று, கந்தகவாசத்தையும், துப்பாக்கிகளின் அலறலையும், நாய்களின் குரைப்பையும், எடுத்து வந்தது.

‘வாறதென்டு சொன்வை வந்திருக்கினம் போல….” வேலன் வாய்விட்டுச் சொன்னான். செல்லாச்சி விக்கலோடு, விழிகள் சிந்திய கண்ணீரோடும், அவன் முகத்தை ஏறிட்டாள். “உண்மையாகவே..?” என்ற கேள்வியை அவள் பார்வை கேட்டது.

அவன் ஆமாம் என்பது போல தலையசைத்துக் கொண்டான்.
செல்லாச்சி அவன் அனைப்பில் இருந்து சற்று விலகி, “ அம்மாளாச்சி..! கைவிட்டிராதயம்மா..” கோவில் இருந்த பக்கமாகக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
“ச்சா.. கொஞ்சம் வேளைக்கு வந்திருக்கலாமே…” அவளே அங்கலாய்த்தாள். அதற்குள்ளாக அவளது உயிரச்சம் ஒளிந்திருந்ததை அவதானித்துக் கொண்டான் வேலன். அவனது மனதிலும் அது மறைந்தேயிருந்தது.

வாழ்தலுக்கான ஆசை யாருக்கு இல்லாமல் போகும். வெடித்து உயிர் குடிக்கும் துப்பாக்கிகளின் பின்னாலும் வாழ்தலுக்கான ஆசை உறைந்தேதான் இருக்கிறது.
துப்பாக்கிகளின் சத்தமும், நாய்களின் குரைப்பும் அடங்கி அமைதியான போது, இருள் நிறைந்துவிட்டது. இருட்டிலே தன்மீது ஒடுங்கிக் கிடந்த செல்லாச்சியை மெல்ல விலக்கி, “ விளக்கேத்துவமே..?” என்றான்.
“அவை வராயினமோ..?” வெள்ளந்தியாகக் கேட்டாள் செல்லாச்சி.

“இன்டைக்கு வராயினம் என்டுதான் நினைக்கிறன்..” எதிர்பார்ப்பை இழக்காமலே பதில் சொன்னான் வேலன்.
“முகத்தை கழுவும்.. ..” அவள் தலையை நிமிர்த்தி மெதுவாகச் சொன்னான்.
“நான் போகமாட்டன் .. எனக்குப் பயமா இருக்கு..” பயத்தில் மறுத்தாள்.

“ நீர் கிணத்தடிக்குப் போக வேணாம். இதில வாளித்தண்ணியில முகத்தைக் கழுவுமென்…”
விலகிக் கொண்ட செல்லாச்சி முதலில் அரிக்கன் லாம்பினை ஏற்றிவைக்க, இருள் சற்று விலகியது. அதன் வெளிச்சத்தில், முற்றத்திலேயே முகங்கழுவினாள்.

பெரியவீட்டு வாசல்வரை அரிக்கன் லாந்தரை பிடித்தபடி வேலன் உடன் வர, செல்லாச்சி சுற்றுமுற்றும் பார்த்தவாறே வீட்டுக்குள் நுழைந்து, நொடிகளில் விளக்கேற்றித் திரும்பினாள்.

செல்லாச்சி கண்களைச் சுழற்றி இருளை ஆராய்ந்தாள். இருள் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. பசியின்மையும், தூக்கமின்மையும், அவர்களின் அன்றைய இரவினைப் பங்கு கொண்டன.

விடிந்தது. பறவைகள் காலையைப் பரபரப்பாக்கின. கொட்டிலில் கட்யிருந்த இலட்சுமி “ம்மா..” என அழைத்தது.
அயர்வும், அச்சமும் நிறைந்திருந்த செல்லாச்சி அதிகாலையில் சற்றுக் கண்ணயர்ந்திருந்தாள். வேலன் வேளைக்கே விழித்துக் கொண்ட போதும், செல்லாச்சியை எழுப்பவில்லை. பரிதாபமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நேற்றுத் தயார் செய்திருந்த பையினை தலைக்குத் தலையணைப்போல வைத்துக் குடங்கியிருந்தாள். அவள் பயத்தின் சாட்சியங்களாக நெற்றியை நீறும் பொட்டும் நிறைத்திருந்தன. யாருக்கில்லைப் பயம். நேற்று துப்பாக்கி நீட்டியவனின் நடுங்கும் கரங்களிலும் நிறையவே, இருந்த வெள்ளை சிகப்பு நூல்களில் அவனிடமிருந்த பயத்தினை வேலன் கண்டிருந்தான்.

அவனது பார்வை அவளுள் ஊடுருவியிருக்க வேண்டும். கண்விழித்தாள். “நேரத்தோடேயே..எழும்பிற்றியளோ… இரவு முழுக்க நித்திரையே வரேல்ல..” காலைத்தூக்கத்துக்கான காரணத்தைச் சொல்லிக் கொண்டு எழுந்தாள். அவன் ஏதும் பேசாதிருந்தான்.
இருள் விலகியிருந்ததால் அவள் சற்று இயல்பாக இருந்தாள். கிணற்றடிக்குப் போக ஆயத்தமானால் செல்லாச்சி. அவளது ஆயத்தங்களைக் கவனித்த வேலன், “குளிக்கப் போறீரே..?”
“ஆம்” என்பதையும், “ஏன்..?” என்பதையும் அவனைநோக்கிய பார்வையில் வைத்தாள் செல்லாச்சி.
“ இனி நீர் சட்டை போடாதையும், சீலையே எப்பவும் கட்டும்…” அவளைச் சட்டையில் காண ஆசைப்படும் வேலனின் அந்த ஒருவரிக் கூற்று, அவனது அச்சத்தின் உச்சத்தை செல்லாச்சிக்கு எடுத்துச் சொன்னது. அந்த ஒருஅவள் ஏதும் சொல்லவில்லை. எண்ணப்பிழை மிக்கவர்களுக்கு உடையெல்லாம் ஒரு தடையல்ல என்பதை அவள் அனுபவத்தின் வழிபுரிந்து கொண்டவள். ஆனாலும் வேலன் சொல்லியதை புரிந்து கோண்டதாக உடல்மொழியால் உணர்த்தியவாறு மாட்டுக் கொட்டில் பக்கமாகச் சென்றாள்.

அவிழ்த்திருந்த கன்றுக்குட்டி தாயின் காலடியில் படுத்துக்கிடந்தது. அதனை தன் நாக்கினால் நக்கிப் பாசத்தை வெளிப்படுத்தியது தாய்ப்பசு. சாணகத்தை அள்ளி, எருக்கொட்டியில் போட்டுவிட்டு, இலக்சுமியை நகர்த்தி மாட்டுக் கொட்டிலை கூட்டினாள் செல்லாச்சி. விளக்குமாற்றின் சத்தம் கேட்பதை வைத்து அவள் மாட்டுக் கொட்டிலடியில் நிற்பதை வேலன் உணர்ந்து கொண்டான்.

அவள் தனது அன்றாடப் பணிகளுக்குள் கரைத்து போவது வேலனுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். முற்றத்தில் கிடந்த வாளியொன்றை கால் இடுக்குகளில் வைத்துக்கொண்டு, வீட்டின் பின்புறமாகச் சக்கரங்களை உருட்டினான்.

இலக்சுமியை சற்றுத் தளர்வாக நீளக் கயிற்றில் கட்டினாள் செல்லாச்சி. போரிலிருந்து இழுத்து வந்த வைக்கோலால் தீவனத்தொட்டியை நிரப்பி, வாளி நிறைய நீரும் வைத்துத் திருப்திப்பட்டுக்கொண்டவளாய் கிணற்றடிக்குச் சென்றாள்.

கிணற்றடியால் அவள் திரும்பி வருகையில், சீலையில் இருந்தாள். அவளைப்பார்த்த வேலன் சேலையிலும் அவள் அழகு வெளிப்பட்டதாகவே உணர்ந்தான். ஆனாலும் சேலை அவளுக்குப் பாதுகாப்பைத் தரும் என்று நம்பினான்.

வேலனுக்கு வயிறு பசித்தது. செல்லாச்சி சத்துமா உருண்டைகளுடனும் தேநீருடனும் தலைவாசல் குந்துக்கு வந்தாள். வேலன் சக்ரநாற்காலியிலேயே பக்கம் வர, இருவரும் பகிர்ந்துண்டார்கள்.

வைரவன் பக்கத்தில் வர “பாவம் ராத்திரி இதுக்கும் சாப்பாடு வைக்கேல்ல…” பரிதாபப்பட்ட செல்லாச்சி, அதற்கும் ஒரு உருண்டையைப் பகிர்ந்தாள். வாலையாட்டியபடியே அதுவும் சாப்பிட்டது. அது சாப்பிடுவதை இரசித்தபடியிருந்தான் வேலன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த வேலன் சடாரெனத் திரும்பி வாசற்பக்கமாகக் குலைத்தபடி ஒடியது. அவர்கள் மறுபடியும் வந்துவிட்டார்கள்…
அச்சம் மறுபடியும் வேலனையும், செல்லாச்சியையும், பற்றிக் கொண்டது. இப்போது அவர்களுடன் புதிததாக இன்னுமொருவன் வந்தான். அவன் துப்பாக்கியை நீட்டியிருக்கவில்லை. ஆனால் துப்பாக்கி நீட்டியவர்கள் அவனைச் சுற்றி நின்றார்கள். அவன் நின்ற தோரணையும், அவனுக்கு மற்றவர்கள் கொடுத்த கவனமும், மரியாதையும், பார்த்து, அவர்களுக்கு அவன் பெரியவன் என்பதை வேலன் புரிந்து கொண்டான்.

“ நீங்க..ரெண்டு பேருதானா…?” அவன் கொஞ்சம் தமிழிலும் பேசினான்.
தலையை ஆட்டினான் வேலன்.
“ ஒங்க வீடா…? “
இல்லை என்பதையும் தலையாட்டலிலேயே சொன்னான்.
“ அவங்க ஒடிற்றாங்களா.. “ ஏளனமாகச் கேட்டவன் “ நீங்க பயம் வேணாம்..” என்றான்.
மறுபடியும் தலையாட்டினான் வேலன். அவன் பின்னால் ஒட்டி நின்றாள் செல்லாச்சி.
“ நங்கி… பயம் வேணாம் ..” செல்லாச்சியைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்.
வேலனும் பயத்தைச் சிறு முறுவலாக்கிட முயன்றான்.

“ கோவிலட்ட முகாமிருக்கு.. நீங்க அங்க போணும்…” என்றான் பெரியவன்.
வேலனுக்கு புரியவில்லை.
“ கோவிலட்ட முகாம் செஞ்சிருக்கு.. எல்லா ஆக்களும் அங்கின இருக் காங்க. நீயும் ரெண்டு பேரும்…அங்கினக்க வரோனும்…” தமிழில் தட்டுத்தடுமாறினான்.
வேலனுக்கு இப்போது ஒரளவு புரிந்து விட்டது. வீடுகளில் இருந்தவர்களையெல்லாம் கோவிலடியில் ஒன்றாகச் சேர்க்கின்றார்கள் என்று.. அது நன்மைக்கோ தீமைக்கோ தெரியாது. ஆராயவும் முடியாது.

“ ஐடென்டிகார்ட்.. இருக்கா…? ”
“இருக்கு சேர்..” என்றவன் செல்லாச்சியைப் பார்த்தான். செல்லாச்சி கைக்குள் துளாவி அடையாள அட்டைகளை எடுத்து நீட்டினாள்.
அதனை வாங்கியவன்.. அவற்றை ஆராய்ந்தான். அதிலிருந்த படங்களுடன் எதிரிலுள்ள முகங்களை ஒப்பீடு செய்த பின் அருகே நின்றவனிடம் நீட்டினான்.
“ மிச்சம் ஒருத்தரும் இல்ல..” என்றான்.
அவன் சொல்வது புரியாது விழித்தான் வேலன்.

பெரியவனிடமிருந்து அடையாள அட்டைகளை வாங்கியிருந்தவன்,
“ வீட்டில வெறோருவரும் இல்லையா…? “ விளக்கமாகக் கேட்டான். அவனது தமிழ் தெளிவாக இருந்தது. ஆனால் அவனது முகம் தமிழற்று இருந்தது.
“இல்லை…ல்லை..”
“ இந்த வீட்டில புலிப் பொடியள் இருக்கா ..? ” என்றான். அதற்கும் அவசரமாக இல்லையெனத் தலையாட்டினான்.
அவர்களுக்குள் என்னவோ சிங்களத்தில் பேசிக்கொண்டார்கள்.

இரண்டு துப்பாக்கிதாரிகளைக்காட்டி “ இவங்களோட நீங்க முகாமுக்குப் போகனும் ….” என்றான்.
“ஐ..சி…?” குழப்பத்தையும், பயத்தையும், கலந்து, அடையாள அட்டைக்கான கேள்வியாக்கினான் வேலன்.
“ பயங் வேணாம் …பதிஞ்ச பின்னக்க ..தருவுறது..” என்று சொன்ன பெரியவன், “ யன்ன..” என்றான்.

எதை எடுப்பது.. என்ன நடக்கப்போகிறது என்பது புரியாமலேயே, செல்லாச்சி வேலனின் நாற்காலியைத் தள்ளத் தொடங்கினாள். நீட்டிய துப்பாகிகளின் பின்னே அமைதியாக அவர்கள் நகர்ந்தார்கள்.

குனிந்து நிலம் நோக்கி நடந்த செல்லாச்சியின் கண்களிலும், வேலனின் கண்களிலும், அந்த முற்றத்தில் பதிந்திருந்த கடினமான சப்பாத்துக்களின் அடையாளங்கள் அச்சத்தையும், அருவருப்பினையும் ஒன்றாக ஏற்படுத்தின.

மாட்டுக் கொட்டிலில் இலட்சுமியும் கன்றும், படலையில் வைரவனும், முற்றத்தில் நானும் தனித்து விடப்பட்டோம்.
அந்த முற்றம் வெறிச்சோடியது…


- தொடரும்.

அவளும் அவளும் – பகுதி 14

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction