free website hit counter

தமிழரசு தலைமைப் போட்டியில் வெல்லப்போவது யார்? (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களின் நேரடி வாக்களிப்பு மூலம் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21ஆம் திகதி) நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறுபவர், வரும் 28ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார். கட்சி யாப்பின் பிரகாரம், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்சியின் தலைவராக நீடிப்பார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தேர்தலின்றி பொது இணக்கப்பாட்டுடன் தேர்வு செய்வதற்கான முயற்சிகள்  பல கட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகள் எவையும் வெற்றிபெறாத நிலையில், தலைவருக்கான தேர்தலை தமிழரசுக் கட்சி நடத்தவிருக்கின்றது. 

பொது இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு உதவும் என்ற பொதுப்புத்தியின் கருத்தியலோடு இந்தப் பத்தியாளருக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அதுவும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள், இயக்கங்களில் தலைமைத்துவம் என்பது பெரும்பாலும் முதுசம் (பரம்பரைச் சொத்து) என்ற தோரணையில் பலரினாலும் கையாளப்படுகின்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈபிஆர்எல்எப், புளொட் தொடங்கி புதிதாக ஆரம்பிக்கும் கட்சிகள், இயக்கங்கள் வரையில் அதன் தலைவராக பொறுப்பேற்பவர், தன்னுடைய ஆயுட்காலம் பூராவும் தலைவராகவே இருக்க விரும்புகிறோர். தன்னுடைய காலத்துக்குப் பின்னும் தன்னுடைய குடும்பத்தார் தலைமைப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இது, உட்கட்சி ஜனநாயகத்தை முற்றாக சிதைத்து, ஒருவரின் முழுமையான ஆளுகைக்குள் சென்று, கட்சியின் செயற்பாட்டை துருவநிலைப்படுத்தி மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிருகின்றது. அவ்வாறான சூழலில் கட்சியின் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்ய வேண்டும் என்ற சரத்தும், அதனை பொது இணக்கப்பாடு இல்லாத சூழலில் தேர்தல் மூலம் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விடயமும் தமிழரசுக் கட்சியின் யாப்பிலுள்ள ஜனநாயகத்தன்மையை பேணுவதற்கான காப்பாக கொள்ள முடியும். தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பிக்கும் போது, அந்தக் கட்சி ஒருபோதும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்று தனி ஒருவரின் ஆளுகைக்குள் சென்றுவிடக் கூடாது என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் நிகழ்ந்த முக்கிய ஜனநாயக  பாதுகாப்பாகும். தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் கட்சியின் எந்த உறுப்பினரும் போட்டியிட முடியும். அவருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். 

கட்சியின் தலைவர் ஒருவரை பொது இணக்கப்பாட்டுடன் தேர்வு செய்வது என்பது, அதிக நேரங்களில் கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களதும் தொண்டர்களினதும் கருத்துக்களை உள்வாங்கி மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, கட்சியில் யார் அதிக ஆளுகையைச் செலுத்துகிறார்களோ அந்த ஒருசிலர் எடுக்கும் முடிவாகும். அவர்கள் எடுக்கும் முடிவை மேலிருந்து கீழ் மட்டம் வரையில் திணிப்பார்கள். புதிய தலைவரும் கட்சியின் ஆளுகை வட்டத்துக்குள் இருந்து மட்டுமே தேர்வாகுவார். கட்சியின் தலைவருக்கும் கடைக்கோடி உறுப்பினருக்கும் அதிலிருந்து தெரிவாகும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் போதிய உரையாடல்களே நிகழ்ந்திருக்காது. தலைவராக வரும்போதே அவர்கள் கொம்பு முளைத்தவர்கள் மாதிரியே கட்சியின் இரண்டாம் மூன்றாம் மட்டங்களில் உள்ளவர்களை அணுகுவார்கள். தேர்தல் வாக்களிப்பு அப்படியான சூழலை கட்சிக்குள் உருவாக்காமல், தலைவர் தங்களினால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற உணர்வு கட்சியின் தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்கும். அது, கட்சியையும், தலைமையும் இயல்பாக அணுகக்கூடியது என்ற நிலை சார்ந்ததுமாகும்.

புதிய தலைவரை தேர்தல் வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்வது, கட்சியைப் பிளவுபடுத்திவிடும் என்ற நிலைப்பாடு பலரிடம் காணப்படுகின்றது. ஆனால், ஜனநாயகம் என்பதே ஒவ்வொருவரது உணர்வுகள், முடிவுகளையும் மதிப்பதாகும். அப்படிப்பட்ட நிலையில், போட்டியில் இருக்கும் நபர்களை எடைபோட்டு சரியானவர் என்று நம்புபவர்களை தேர்வு செய்வது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். அதனைப் புரிந்து கொள்ளாது, தனக்கு உவப்பான நபர் வெற்றிபெறவில்லை என்பதற்காக கட்சியில் பிளவினை ஏற்படுத்துபவர்களை எந்தத் தருணத்திலும் பொறுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் ஒருபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவும் மாட்டார்கள். மாறாக, ஜனநாயக விரோத சிந்தனையுள்ளவர்களாகவே நோக்கப்படுவார்கள். மாற்றுக்கருத்துக்கள், கொள்கைகள் இருந்தாலும் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்யப்படும் ஒருவரின் கௌரவத்தை காப்பாற்றுவதுதான் அரசியல் அடிப்படை. அப்படியான நிலையில், ஜனநாயக முறைப்படி தேர்வாகும் தலைவரை மதித்து, அவரின் கீழ் ஒருங்கிணைவதுதான் ஒழுங்கு. அந்த ஒழுங்குக்கு தயாராக இல்லாதவர்கள் குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அந்த மனநிலையோடு இருப்பவர்களிடம் அதிகாரம் சென்று சேரும் போது, அதிகார துஷ்பிரயோகம் என்பது தாராளமாக இடம்பெறும். அது, கட்சியை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிடும். 

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆனால், போட்டி என்பது 'சுமந்திரன் எதிர் சிறீதரன்' என்ற இருமுனையாக திறந்திருக்கின்றது. யோகேஸ்வரன், தன்னுடைய ஆதரவு சிறீதரனுக்கு என்று அறிவித்துவிட்டார். அப்படியானால், அவர் ஏன் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்ற கேள்வி எழலாம். அவர், சிறீதரனின் தலைமைத்துவத் தேர்வை உறுதிப்படுத்துவதற்கான உத்தியாக களமிறங்கியிருக்கிறார். சுமந்திரனின் ஆதரவாளர்களாக இருக்கும் தன்னுடைய அனுதாபிகளை சிறீதரன் பக்கத்துக்கு நகர்த்தும் திட்டங்களின் போக்கிலானதாகும். இது, ஆரம்பத்திலேயே அனைவரினாலும் உணர்ந்து கொள்ளப்பட்டது. தேர்தல்களில் மற்றவர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக அதிக தருணங்களில் டம்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவது வழக்கம். ஆனால் அப்படியானதொரு நிலைக்கு யோகேஸ்வரன் கீழிறங்கியமை வருத்தமானது. ஏனெனில், மட்டக்களப்பில் இருக்கும் தமிழரசின் மூத்த தலைவர்களில் யோகேஸ்வரன் முக்கியமானவர். மக்களால் தேர்வாகி பாராளுமன்றத்தில் இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் ஏன் டம்மி வேட்பாளர் ஆனார்? அவரை யார் இயக்கியது என்பதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகளாக தொடர்கின்றன. அவர், தனிப்பட்ட ரீதியில் சுமந்திரனின் வெற்றியை தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானத்துக்கு வந்திருந்தால், அது அவருடைய தனி உரிமைதான். ஆனால், அந்தத் தனி உரிமை தன்னை கடந்த காலங்களில் ஆதரித்து நின்றவர்கள் மீது மறைமுகமாக செலுத்தும் ஆதிக்கமாக கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. 

சுமந்திரனும் சிறீதரனும் தங்களின் வெற்றி தொடர்பில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல்குழுக் கூட்டத்திலும் பொது இணக்கப்பாட்டுடன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அது வெற்றியளிக்கவில்லை. தேர்தல் மூலம் யார் தலைவராக தேர்வானாலும் அவரின் தலைமைத்துவத்தை மதித்து செயற்படுவதாக சுமந்திரனும் சிறீதரனும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள். தேர்தல் மூலம் தலைவரைத் தேர்தெடுப்பது கட்சியின் ஜனநாயகத்தை காக்கும் என்றும் அவர்கள் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்புக்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால், சிறீதரன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தன்னிடம் தலைமைத்துவத்தை தருமாறு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாத்திரமல்ல, சுமந்திரனை ஆதரிப்போர் என்று நம்புவோரிடமும் கேட்கிறார். சுமந்திரன் தலைமைத்துவப் போட்டியில் இருந்து விலகி தனக்கு இடமளிக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளரை தூது செல்லுமாறு சிறீதரன் கோரினார் என்ற விடயம் மேலே வந்திருக்கிறது. ஆனால், அதற்கு பொதுச் செயலாளர் உடன்படவில்லை.

தலைமைத்துவப் போட்டியில் வென்றால் தலைவராகுவது, இல்லையென்றால் தோற்றாலும் தனக்கான ஆதரவு நிலையை இந்தத் தேர்தலில் நிரூபிப்பதன் மூலம் தேசிய அமைப்பாளர் என்ற பதவியை பெறுவதுதான்  சிறீதரனின் நோக்கம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். தமிழரசுக் கட்சியில் தேசிய அமைப்பாளர் என்ற பதவிநிலை இல்லை. ஆனால், அவ்வாறான பதவியொன்றை தனக்கு வழங்க வேண்டும் என்று சிறீதரன் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்து கோரி வருகிறார். அதன்மூலம், வடக்கு கிழக்குப் பூராவும் தனக்கான ஆதரவாளர்கள் மட்டத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பது அவரது இலக்கு. அது,  எதிர்காலத்தில் தலைமைத்துவப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற உதவும். தலைமைத்துவ போட்டியில் வென்றாலும் தோற்றாலும் அந்த முயற்சிக்குப் பின்னால் ஆதாயம் என்ற நிலையில் சிறீதரன் இருக்கிறார்.

சுமந்திரனைப் பொறுத்தளவில் தலைமைத்துவ போட்டியில் தான் இலகுவாக வென்றுவிடலாம் என்றுதான் ஆம்பத்தில் இருந்து நம்பினார். அது, கடந்த பொதுத் தேர்தலில் தான் அதிக வாக்குகளைப் பெற்று வெல்வேன் என்று நம்பியதற்கு ஒப்பானது. ஏனெனில், ஒரு கட்டம் வரையில், அதாவது சிறீதரன் போட்டியில் இறுதிவரை உறுதியாக நிற்பார் என்று சுமந்திரன் நம்பவில்லை. ஒரு பேரம் பேசலுக்கான கட்டமாகவே சிறீதரன் இந்தத் தலைமைத்துவ தேர்தலை கையாள்கிறார் எனவே, ஒரு கட்டத்தில் சிறீதரன் தேர்தலில் இருந்து விலகி விடுவார் என்று சுமந்திரன் மாத்திரமல்ல, அவரது ஆதரவாளர்களும் நம்பினார்கள். ஆனால், போட்டி எதிர்பார்த்தைவிட கடுமையானது என்பது இப்போது அவருக்குப் புரிந்திருக்கும். தலைமைத்துவ தெரிவில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாத்திமல்ல, வெளித்தரப்புக்கள் தங்களது தலைமைகளை நீட்டி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் அவர் உணரத் தொடங்கியிருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் இவ்வாறானதொரு சிக்கலை சுமந்திரன் எதிர்கொண்டார். வெளித்தரப்பினரின் பெருந்தொகைப் பணம் சுமந்திரனுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டது. அவரது கட்சியின் வேட்பாளர்கள் சிலரே, அதற்காக சோரம்போனதான குற்றச்சாட்டுக்கள் உண்டு. இம்முறையும் அவ்வாறான வெளித்தரப்புக்கள், சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று நம்பும் தரப்பினரை பணம் கொடுத்து வாங்க முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. 

அதிலும், கட்சியின் மாநாட்டினை நடத்துவதற்கு குறித்த வெளித்தரப்பினரிடம் பணம் பெறலாம் என்று அரசியல்குழு உறுப்பினர் ஒருவர் கூறிய விடயம் கவனத்துக்குரியது. எனினும் அவரின் பரிந்துரையை அரசியல்குழு ஆரம்பத்திலேயே புறந்தள்ளிவிட்டது. வெளித்தரப்பினரிடம் பணம்பெற்று கட்சியை அவர்களிடம் அடகு வைக்கும் நிலைக்கு தமிழரசுக் கட்சி போன்ற தமிழ் மக்களின் பிரதான கட்சி செல்வது என்பது சாபக்கேடானது. அந்தச் சிந்தனையைக் கொண்டிருப்பவர்களை கட்சியினரும் தொண்டர்களும் புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும். 

சுமந்திரனுக்கு எதிராக மத அடையாள விசமப்பிரச்சாரமும் மூத்த அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் சிலரினாலும், அடிப்படைவாத மதக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இது, பௌத்த சிங்கள அடிப்படைவாதம் பரப்பும் பெரும்பான்மைவாதத்துக்கு ஒப்பானது. தமிழரசின் நிறுவனத் தலைவர் தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவர். அவருக்கு எதிராக நின்றவர்கள் பலரும் தங்களை பெரும் சைவர்களாக காட்டிக் கொண்டவர்கள். ஆனால், தமிழ் மக்கள் தங்களுக்கு யார் தலைவராக வேண்டும் என்பதை மத அடையாளங்கள் தாண்டி நின்று தேர்வு செய்தார்கள். அந்தத் தெளிவு தமிழ் மக்களிடம் இருக்கும் போது, தமிழரசின் தொண்டர்களிடம் இல்லாமல் இருக்காது. இவ்வாறான விடயங்களை பிரிவினையை வளர்க்கும் உத்தியாகவே இந்தப் பத்தியாளர் நோக்குகிறார். 

நாக்பூர் 'ஆர்.எஸ்.எஸ்' கொடுங்கரங்கள் வடக்குக் கிழக்கு பூராவும் படரத் தொடங்கியிருக்கின்றது. அந்தக் கரங்களினால் தின்று கொழுத்தவர்களும், அகப்பட்டவர்களும் மதப் பிரிவினையை தோற்றுவிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருசில அரசியல் ஆய்வாளர்களும் இருப்பதுதான் ஏமாற்றமானது. ஏனெனில், அவர்கள் தங்களை சமூக நீதியின் காவலர்களாக ஒலிவாங்கிகளுக்கு முன்னால் தொடர்ச்சியாக காட்டிக் கொள்பவர்கள். பண முதலைகளில் தலையீடு, மதப் பிரிவினைவாத சக்திகளின் பிளவுபடுத்தும் உத்தி ஆகியவற்றைத் தாண்டியும்தான் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத் தேர்வு இடம்பெற வேண்டியிருக்கின்றது. 

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சியின் தலைமை என்பது, தவிர்க்க முடியாமல் ஆளுமைமிக்கது. புதிய தலைவராக யார் வரப்போகிறார் என்பதை ஏனைய கட்சிகளும் எதிர்நோக்கி இருக்கின்றன. சுமந்திரனோ, சிறீதரனோ யார் தலைவராக வந்தாலும், அது அவர்களுக்கு சற்று கடினமானதாகத்தான் இருக்கும். ஏனெனில் கடந்த காலத்தில் அவர்கள், மாவை சேனாதிராஜா என்ற தலைவரை இலகுவாக கையாண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், புதிய தலைமை அப்படியிருக்க வாய்ப்புக்கள் இல்லை. அதுபோக, புதிய தலைமை தன்னை தமிழ் மக்களின் பிரதான கட்சியின் தலைமையாகவே நிறுவி முன்நகரும். அது, கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் முதுகில் சவாரி செய்தவர்களுக்கு உவப்பானதாக இருக்காது. ஆனால், தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கு முன்னால் ஏகப்பட்ட கடப்பாடுகள் உண்டு. அது கட்சியைப் பாதுகாப்பது என்ற ஒற்றை நோக்கம் சார்ந்தது அல்ல. மாறாக, தமிழ்த் தேசிய அரசியலின் காப்பரணாக நின்று, தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு அர்ப்பணிப்போடு செயற்படுவதாகும். அதனை நோக்கிய சிந்தனையும் செயற்பாடும் அவசியமாகும். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction