free website hit counter

தமிழரசுக் கட்சி புதிய பயணத்தை ஆரம்பிக்குமா? (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோல்வி முகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு புதிய தலைமைத்துவத்தை நோக்கி நகரத் தயாராகியிருக்கிறது. தமிழர் தலைநகரான திருகோணமலையில் எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் புதிய தலைவர் பதவியேற்பார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் இம்முறை தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு நேரடி வாக்களிப்பின் ஊடாக புதிய தலைவரைத் தேர்தெடுக்கப் போகிறார்கள். அவ்வாறு தேர்வாகும் தலைவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்சியின் தலைவராக பதவி வகிப்பார். 

தந்தை செல்வா தலைமையில் 1949 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி, 1972 மே மாதம் 4ஆம் திகதி தமிழர் (ஐக்கிய) விடுதலைக் கூட்டணி தோற்றுவிக்கப்படும் வரையில், சுமார் 23 வருடங்கள் தனிக் கட்சி அடையாளத்தோடு இயங்கியது. தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டாகத்தான்  தமிழர் விடுதலைக் கூட்டணி  தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பிக்கப்பட்ட சில காலத்துக்குள்ளேயே மலையக அரசியல் கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டுவிட்டார். இன்னொரு பக்கம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொன்னம்பலம் குடும்பத்தாரின் தனியாவர்த்தனத்தினால் அல்லாடத் தொடங்கிவிட்டது. இதனால், அந்தக் கட்சியின் மு.சிவசிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் இணைந்துவிட்டார்கள். கூட்டணி என்ற அடையாளம் இருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, கட்சிக்குரிய யாப்பு வடிவங்களோடு இயங்கத் தொடங்கியது. அன்று முதல் தமிழரசுக் கட்சியின் பெயர் உறங்கு நிலைக்குச் சென்றுவிட்டது. ஏனெனில், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய நாமத்தில் இயங்கியது என்னவோ தமிழரசுக் கட்சிதான். அங்கு புதிதாக இணைந்தவர்கள் என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த ஒருசில தலைவர்களை மட்டுமே கொள்ள முடியும். 

கூட்டணி அடையாளத்துக்குள் தன்னை புகுத்திய தமிழரசுக் கட்சி 32 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் தன்னை மீட்டெடுத்துக் கொண்டது. கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருக்கும் வீ.ஆனந்தசங்கரி தரப்புக்கும், இரா.சம்பந்தன் தரப்புக்கும் இடையில் எழுந்த முறுகல்களை அடுத்துதான், தமிழரசுக் கட்சி மீட்டெடுக்கப்பட வேண்டி வந்தது. அதுவும், தமிழரசுக் கட்சியை மீட்டு மக்களிடம் பிரபலப்படுத்திக் கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள். 2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக வீட்டுச் சின்னத்தை முன்மொழிந்ததும் இறுதி செய்ததும் விடுதலைப் புலிகள். அன்று கூட்டமைப்பில் இருந்தவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தையும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வெளிச்ச வீட்டுச் சின்னத்தையும் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக முன்மொழிந்தார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் தந்தை செல்வாவின் அடையாளத்தோடு இருக்கும் வீட்டுச் சின்னத்தை மக்களிடம் மீண்டும் சேர்ப்பிக்கும் தீர்க்க(தரிசன)மான முடிவை எடுத்தார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னால் இருந்து பார்க்கும் போது, தமிழரசுக் கட்சியை புலிகள் மீட்டெடுத்தமையை அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி, விடுதலைப் புலிகளினால் மீட்டெடுக்கப்பட்ட கட்சி என்ற அடையாளங்களோடு இருக்கும் தமிழரசுக் கட்சி கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக படுமோசமான பின்னடைவுகளை நோக்கிச் சென்றது. அதற்கு, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், இளந்தலைவர்கள் என்று அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளில், தமிழரசுக் கட்சி மாத்திரமே அரசியல் கட்சிக்குரிய அனைத்துக் கட்டமைப்புக்களையும் கொண்டிருக்கின்றது. அதுபோல, ஒரு பிரதேசத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் தமிழர் தாயகம் எங்கும் தன்னை விஸ்தரித்திருக்கின்றது. அப்படிப்பட்ட கட்சி 2015 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சந்தித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2020 பொதுத் தேர்தல் என்ற இரு முக்கிய தேர்தல்களிலும் தோல்வி கண்டது. அந்தத் தோல்விக்கான காரணங்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆராயப்பட்டு விட்டன. அதில், பிரதானமானது கட்சிக்குள் அணி பிரித்து மோதி ஒருவரையொருவர் தோற்கடிக்க முனைந்தமையாகும். எந்தவொரு கட்சியும் தனக்குள் மோதிக்கொள்ள விரும்பாது, ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் கூச்சப்படும் அளவுக்கு தமிழரசுக் கட்சியினர் நடந்து கொண்டார்கள். 

இவ்வளவு பின்னடைவுகளுக்குப் பிறகும் தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழரசுக் கட்சிதான், முதன்மைக் கட்சியாக இருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகளைப் பெற்ற கட்சி. அப்படியான நிலையில், அந்தக் கட்சி தன்னைப் பலப்படுத்திக் கொள்வது என்பது, தமிழ் மக்களின் ஆணையென்று கொள்ளப்பட வேண்டும். தமிழரசுக் கட்சி 2004 மீட்டெடுக்கப்பட்ட காலம் முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகள் சம்பந்தன் தலைவராக இருந்தார். அதில் முதல் ஐந்து ஆண்டுகள் அது ஒப்புக்கான பதவி மாத்திரமே. ஏனெனில், அப்போது தமிழர் அரசியலின் தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைப் புலிகளே இருந்தார்கள். 2009க்குப் பின்னரான காலத்தில் சம்பந்தன் தன்னை ஆளுமையான தலைவராக முன்னிறுத்தினார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியும் நடந்து கொண்டார். ஆனால், அவர், 2014இல் தமிழரசுக் கட்சி தலைமைப் பதவியை மாவை சேனாதிராஜாவிடம் கையளித்த விடயமே அந்தக் கட்சியை மோசமாக தோற்கடிக்கக் காரணமானது. கட்சித் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் கையளிக்கும் போது, தான் சொல்வதையெல்லாம் கேட்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தை முன்னிறுத்திக் கொண்டு சம்பந்தன், மாவை சேனாதிராஜாவிடம் கைளித்திருக்கின்றார். அன்று  சம்பந்தன் எடுத்த சுயநல முடிவு, கட்சியை பாரிய சிக்கலுக்குள் சென்று சேர்த்தது. 

மாவை கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் அவரிடத்தில் முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அப்படி அவர் ஏதாவது முடிவுகளை அறிவித்தாலும் அதனை யாரும் கருத்தில் கொள்வதில்லை. தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடுகள் என்ன என்பது குறித்து சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் குரல்களே இறுதியானவையாக பார்க்கப்பட்டன. சம்பந்தன் வயது மூப்பினால் அல்லாடத் தொடங்கிய பின்னரும் கூட தமிழரசுக் கட்சியின் முகமாக மாவை யாரினாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏன், சொந்தக் கட்சியினரால்கூட ஏற்கப்படவில்லை. அப்படி ஏற்கப்பட்டால்தானே, தென் இலங்கையும் சர்வதேசமும் அவரை ஒரு தலைவராக கொள்ளும். பல தருணங்களில் மாவையை, அவருடைய தொகுதிக் கிளைக்குரிய தலைவராகவே பலரும் கருத்தில் கொண்டார்கள். இவ்வாறான நிலை நீடித்தால், கட்சி இன்னும் இன்னும் மோசமான பின்னடைவைக் காணும் என்பதை தமிழரசுக் கட்சியின் இளைய தலைமுறையும், நலன்விரும்பிகளும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். 

குறிப்பாக, 2020 பொதுத் தேர்தல் பின்னடைவுகளை அடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் அவசியமானது என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்தன. ஆனால், புதிய தலைவரைத் தேர்தெடுப்பதற்கான மாநாட்டினை நடத்துவதற்கே நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய மாநாட்டைக் கூட்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்சி யாப்பினைக் கொண்டிருக்கின்ற கட்சி, தேசிய மாநாடுகளை நடத்துவதையே, பல மத்திய குழுக் கூட்டங்களையும் அரசியல் குழுக் கூட்டங்களையும் கூட்டி அழுத்தங்களை வழங்கி நடத்த வேண்டி வந்திருக்கின்றது. அதற்கு, வயது மூப்பினால் அல்லாடினாலும் பரவாயில்லை தொடர்ந்தும் பதவி பகட்டோடு இருக்க வேண்டும் என்ற மாவையின் சுயநலம் மாத்திரமே காரணமாகும். 

எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, அதனை பிற்போடுவதற்கு மாவை சேனாதிராஜா தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டாக அவர், சம்பந்தனின் பெயரை துணைக்கு அழைத்துக் கொள்கிறார். கட்சி மாநாட்டினை ஒத்திவைத்தால், கட்சியின் தலைவராக தான் தொடந்தும் இருக்கலாம் என்ற பேராசையைத் தாண்டி மாவை சேனாதிராஜா இதன்மூலம் என்னத்தை அடையப்போகிறார் என்று தெரியவில்லை. சம்பந்தன் போலவே, மாவையும் வயது மூப்பு தொல்லைகளினால் அவதிப்படுகிறார். ஆனாலும், அவருக்கு இன்னும் கட்சித் தலைமைப் பதவியை விட்டுவிலக துளியும் மனமில்லை.

கட்சியின் திருகோணமலை தொகுதிக் கிளைத் தெரிவு முறையாக நடைபெறவில்லை என்று தெரிவித்து சம்பந்தன் கடிதம் எழுதியிருப்பதான விடயம் மாவையினால் மீண்டும் மீண்டும் முன்கொண்டு வரப்படுகின்றது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொகுதிக்கிளை தெரிவில் எந்தக் குழப்பங்களும் இல்லை என்று கடந்த மாத இறுதியில் திருகோணமலையில் கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் உறுதி செய்துவிட்டது. ஆனாபோதிலும், திரும்பவும் சம்பந்தனின் பெயரை முன்னிறுத்திய கடிதத்தைக் கொண்டு எப்படியாவது, திருகோணமலைத் தொகுதிக் கிளைத் தெரிவை காட்டி தேசிய மாநாட்டை ஒத்திவைக்கலாம் என்று மாவை தன்னுடைய இறுதி நேர ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரமும், அவர் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் தனக்கு இணக்கமானவர்கள் சிலரோடு கூடிப் பேசிவிட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடும் என்றிருக்கிறார். அங்குதான், தேசிய மாநாட்டினை நடத்துவதா இல்லையா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், மாவையின் கூற்றுக்களைப் புறந்தள்ளி கட்சியின் தேசிய மாநாடு அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் சம்பந்தரின் பெயரில் அண்மைய நாட்களில் எழுதப்படுவதாக கூறப்படும் கடிதங்கள் தொடர்பில் சந்தேகம் நீடிக்கின்றது. வயது மூப்பு, மறதி உள்ளிட்ட காரணங்களினால் சம்பந்தன் அல்லற்படுகிறார். அதனைப்பயன்படுத்திக் கொண்டு, அவரின் பெயரில் வேறு நபர்கள் கடிதங்களை எழுதுகிறார்களா என்ற சந்தேகம்தான் அது.

பிறந்திருக்கும் 2024, தேர்தல் ஆண்டாக இருக்கப் போகிறது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி தன்னை பலப்படுத்த வேண்டியது அவசியமானது. தமிழ்த் தேசிய கட்சிகள் பலமிழக்கும் போது, பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிகளும் அவற்றின் துணைக்குழுக்களும் தமிழர் தாயகப் பகுதிகளில் வாக்குகளை கபளீகரம் செய்கின்றன. இது, தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதித்துவத்தை  பாரியளவில் வீழ்ச்சியடைய வைக்கின்றது. அப்படிப்பட்ட சூழலில் தமிழரசுக் கட்சி ஆளுமையுள்ள புதிய தலைமைத்துவத்தின் கீழ் செல்வது தவிர்க்க முடியாதது. அது கட்சியை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் நம்பிக்கை கொள்ள வைக்கும்.தந்தை செல்வா தோற்றுவித்து, புலிகள் மீட்டெடுத்துக் கொடுத்த கட்சியை காலில் போட்டு மிதிக்கும் நிலைக்கு அந்தக் கட்சியினரே கொண்டு சேர்த்துவிட்டார்கள் என்ற வருத்தம் மக்களிடம் அதிகமாகவே உண்டு. அப்படிப்பட்ட நிலையில், அதனைக் கடந்து நம்பிக்கை பக்கங்களை அடைவது அவசியமானது. அந்தப் புள்ளியை தொடுவதற்கான பயணத்தை தலைமைத்துவ மாற்றத்திலிருந்துதாவது தமிழரசுக் கட்சி ஆரம்பிக்க வேண்டும். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction