வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள் இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான உத்திகள்.
விடுதலைப் புலிகளின் தோல்விக் கட்டங்களில் கருணாவின் பிளவு முக்கிய பங்கை வகித்தது. அதனை, வெற்றிகரமாக நிகழ்த்தியவர் இன்றைய ஜனாதிபதியும் அன்றைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க. இன்றைக்கும் அவர், தமிழ்த் தேசிய அரசியலை குண்டர்கள், கூலிப்படைகளைக் கொண்டு மெல்ல மெல்ல நீக்கம் செய்ய தொடங்கியிருக்கின்றார். அதற்கு, தமிழ்த் தேசியத்தின் போர்வையில் உலவும் சில கட்சிகளும் குழுக்களும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றன.
தியாகி திலீபனின் 35ஆவது நினைவு நாளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள், வேலன் சுவாமி குழு உள்ளிட்டவர்கள் நல்லூரில் நிகழ்த்திய அயோக்கியத்தனங்களைப் பார்த்தால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து மக்களை அகற்றுவதற்காக இந்தத் தரப்புக்கள் எவ்வளவு மும்முரமாக இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த தரப்புக்கள் அனைத்திடமும் குறுகிய சுயநல அரசியல் இலாப நோக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் வாக்குகளை முன்னிறுத்திய அரசியல் பிரதானமானது. அதற்காக குரங்குகள் மாதிரி குட்டிக்கரணங்களை போட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தியாகி திலீபன் ஒரு குறியீடு. காந்தியின் வழியாக உலகத்துக்கு அஹிம்சை போதித்த பாரத தேசத்திற்கே திலீபன் அஹிம்சை போதித்தவர்; ஓர் ஆயுதமுனை போராட்ட இயக்கத்துக்குள் இருந்து அஹிம்சை வழியில் போராடி உயர்நீத்தவர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். அவரின் ஆகுதிப் பயணம், தமிழ்த் தேசியப் போராட்டத்தினை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழுத்து வந்தது. அப்படிப்பட்ட ஒருவரின் நினைவிடத்தில், கட்சிகளின் ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இயங்கும் பொறுக்கிகள், காவாலிகள், கூலிக் குண்டர்கள் நின்று ஏட்டிக்குப் போட்டியாக தகாத வார்த்தைகளினால் சண்டையிட்டு, நினைவு கோரலுக்கான வெளியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு சாதாரண ஒரு தமிழ் மகனோ, மகளோ கட்சி, குழு அரசியலுக்கு அப்பால் நின்று அஞ்சலி செலுத்துவதற்கான கட்டங்களை முன்னணியினரும், ஜனநாயகப் போராளிகளும், வேலன் சுவாமி குழுவும் நிராகரித்தார்கள். நினைவுகூரலுக்கான கட்டம் எவ்வளவு ஆர்த்மார்த்தமாக முன்னெடுக்கப்பட வேண்டுமோ அதுவெல்லாம் நகர்த்தப்பட்டு, ஏட்டிக்குப் போட்டியாக நினைவுச்சுடர் ஏற்றி, பொதுச்சுடரை தூக்கி வைத்துக் கொண்டு இழுபறிப்பட்டு அலங்கோலமாக்கினார்கள். இவ்வளவு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிய தரப்புக்கள் எல்லாமும், திலீபனை அவமானப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான வெளியை பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கின்றது. நெருக்கடி காலங்களில் எல்லாம் பெரும் அர்ப்பணிப்போடு தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இராணுவத்தினரின் நெருக்கடிகளைத் தாண்டியிருக்கிறார்கள். ஆனால், இம்முறை சிங்கள மேலாதிக்கத் தரப்பு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றது. அதுவும், பிரித்தாளும் உத்தியையும், கூலிப்படைகளையும் இறக்கிவிட்டு பார்த்துக் கொண்டது. தென் இலங்கையின் எதிர்பார்ப்பை முன்னணியும், ஜனநாயகப் போராளிகளும், வேலன் சுவாமி குழுவும் கொஞ்சமும் குறையாமல் நிறைவேற்றியிருக்கின்றன.
முன்னணி என்கிற முகப்புப் பெயரில் இயங்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வாக்குக்கான அரசியல் என்பது தொடர்ச்சியாக கறுப்புப் பக்கங்களினால் நிரம்பியது. அமைச்சுப் பதவிக்காக ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்தியா வம்சாவளித் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுக்காது, தந்தை செல்வா, காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், கட்சி கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கு காங்கிரஸின் குண்டர்களும், கூலிப்படையினரும் கூட்டங்களுக்குள் புகுந்து ரௌடித்தனங்களைப் புரிவது வழக்கம். அதுவும், கூட்டத்தில் கூடியிருக்கும் மக்களை நோக்கி உயிருள்ள பாம்புகளை எறிவது வழக்கம். அதனை,காங்கிரஸார் கூட்டத்தை கலைக்கும் உத்தியாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சீனியர் பொன்னம்பலம் காலத்தில் காங்கிரஸார் அரங்கேற்றிய ரௌடித்தனத்தை, ஜுனியர் பொன்னம்பலத்தின் காலத்திலும் அவர்கள் விடுவதாக இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளர்கள் என்று யாரும் இல்லை. மாறாக, ஆதரவாளர்கள் என்கிற பெயரில் குண்டர்கள், ரௌடிகளையே தொடர்ச்சியாக வளர்த்து வந்திருக்கிறார்கள். ஏனெனில், ஆதரவாளர்கள் என்கிற கட்டம், கேள்வி கேட்கும் கட்டங்களைக் கொண்டது. குண்டர்களுக்கோ, ரௌடிகளுக்கோ கேள்வி கேட்கும் அதிகாரம் ஏதும் இல்லை. அவர்கள், ஏவல் அடிமைகள். பொன்னம்பலம் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வதுதான் அவர்களின் ஒரே வேலை.
திலீபன் நினைவிடத்தில் காங்கிரஸின் குண்டர்கள் மஞ்சள் நிற ரீ சேர்ட்டுக்களோடு நின்று அரங்கேற்றிய அடாவடிகளே அவற்றுக்கு சாட்சி. நினைவேந்தலுக்கான உரிமை பற்றி பாராளுமன்றத்துக்குள் மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் அதனை, நியாயமாக மக்கள் அனுஷ்டிப்பதற்கான கட்டங்களை முடக்காது இருக்க வேண்டும். தென் இலங்கையில் பொங்கிவிட்டு வந்து, மக்கள் அஞ்சலிப்பதற்கான கட்டங்களை கட்சியின் குண்டர்களை வைத்து குழப்பித் தடுக்கக் கூடாது. நல்லூரில் காங்கிரஸின் குண்டர்கள் அடாவடி புரிந்து கொண்டிருக்க கஜேந்திரகுமார் அதனை பார்த்திருந்தது, அற்பத்தனமாக அரசியல்.
ஜனநாயகப் போராளிகள் என்கிற பெயரில் கட்சியை நடத்தும் முன்னாள் போராளிகள் சிலரும் அபத்தமான அரசியலை தொடர்ச்சியாக செய்ய எத்தனிக்கிறார்கள். அவர்கள் நினைவேந்தலுக்கான வெளியை காங்கிரஸ் கட்சியினர் போன்றே, மோசமான வழிகளில் குழப்பும் அணுகுமுறையோடு செயற்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியப் போராட்டத்தில் முன்னாள் போராளிகளின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. அதனை எந்தவொரு தருணத்திலும் நிராகரிக்க முடியாது. ஆனால், முன்னாள் போராளிகள் என்கிற பெயரை வைத்துக் கொண்டு அற்பத்தனமான நடவடிக்கைகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியிலுள்ள சிலர் இயங்குகிறார்கள். அதுவும், நினைவேந்தலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கான வேலைகளை ஆற்றியமையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நினைவேந்தலை ஓர் ஒழுங்கில் நடத்துவதற்குப் பதிலாக, ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடுகளுடன் அணுக வேண்டும் என்பது எந்தத் தருணத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை புதிய மீட்பராக காட்டிக் கொண்டு வேலன் சுவாமி எனும் நபர் யாழ்ப்பாணத்தில் வலம் வருகிறார். அவர், பொத்துவில் இருந்து பொலிகண்டிக்கான மக்களின் போராட்டத்தை தன்னுடைய போராட்டமாக அபகரித்த ஒருவர். அவரின் நோக்கம் பலத்த சந்தேகங்களுக்கு உட்பட்டது. விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலுக்குள் முடிவை அண்மித்துக் கொண்டிருந்த காலத்தில், கொழும்பில் சின்மயா மிஷன் எனும் அமைப்பில் சுவாமிஜி என்ற வேடத்தில் அலைந்தவர். பின்னரொரு காலத்தில் யாழ்ப்பாணம் வந்த அவர், சின்மயா மிஷனோடு பிணக்கப்பட்டு வேலன் சுவாமியாக வேடம் மாறினார். அவரின் செயற்பாடுகளில் தமிழர் நலன் என்பதைத் தாண்டி, பிறத்தியரின் நலன்களே அதிகமாக இருப்பதான சந்தேகம் உண்டு. அவரிடம் தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்து தீர்க்கமான எந்த எண்ணமும் இல்லை. அவர் தன்னை திடீர் போராளியாக் காட்டி கோமாளித்தனங்களையே அதிகம் அரங்கேற்றுகிறார். இம்முறை திலீபன் நினைவேந்தலை அவரும் கையகப்படுத்த முனைந்தார். ஆனால், அவரைத் தாண்டிய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களுமாக காங்கிரஸ் கட்சியினரும் ஜனநாயகப் போராளிகளும் போட்ட அடிதடிக்கும் வேலன் சுவாமி தூக்கி எறியப்பட்டுவிட்டார்.
தமிழ் மக்களுக்கு நினைவேந்தலுக்கான வெளி கிடைத்தாலும் அதனை வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகளும், வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தரப்புக்களும் ஒருபோதும் அனுமதிக்காது. அப்படியான நிலையில், தமிழ்ச் சமூகம், ஒவ்வொரு நினைவேந்தலுக்குமான பொதுக் கட்டமைப்பை நோக்கி நகர வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள், தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், சமயப் பெரியார், முன்னாள் போராளிகள், பெற்றோர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் உள்வாங்கப்பட வேண்டும். இல்லையென்றால், திலீபனின் நினைவிடத்தில் அரங்கேற்றப்பட்ட அசிங்கத்தை முள்ளிவாய்க்காலிலும், மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நிகழ்த்துவதற்கு தயங்கமாட்டார்கள்.