free website hit counter

கனடா குழப்பமும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“...எங்களுக்கு அரசியல் தீர்வெல்லாம் தேவையில்லை; தமிழீழம் தான் தேவை. இங்கு வந்து அரசியல் தீர்வு பற்றி நீ(!) பேசத் தேவையில்லை. இதை நீ(!) இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பேசு...” 

இவை கடந்த சனிக்கிழமை கனடாவில் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்த அரசியல் சந்திப்பொன்றில் குழப்பம் விளைவித்தவர்களினால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு மேலதிகமாக “நீ(!) கோட்டாவின் ஆள்; இங்கு இனி வரத்தேவையில்லை...” என்பது ஈறாக தூசண வசையும் பொழியப்பட்டது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரனும் இரா.சாணக்கியனும் சென்றிருக்கிறார்கள். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாகவே கூட்டமைப்பின் கனடா கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்வுக்குள் புகுந்தவர்களினாலேயே மேற்கண்ட கோசங்களும், தூசண ஆராதனைகளும் செய்யப்பட்டன.

புலம்பெயர் தேசங்களில் சுமந்திரன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும், நிகழ்வுகளுக்குள் புகுந்து குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அவுஸ்திரேலியா, பிரித்தானியா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்கனவே திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே கனடாவில் இடம்பெற்ற குழப்பங்களையும் நோக்க வேண்டும். தாயகத்தில் எந்தவொரு தருணத்திலும் அமைதியான சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் குழப்பம் விளைவிப்பவர்களின் அடிப்படை நோக்கம். தங்களின் நோக்கத்துக்கு யார் யாரெல்லாம் குந்தகமாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் தமிழின துரோகியாக அடையாளப்படுத்தி அவர்களை அரங்கில் இருந்து அகற்றுவதற்காக அனைத்து வகையான தகிடு தித்தங்களையும் கடந்த காலங்களில் அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தாயகத்திலுள்ள மக்கள் குறித்தோ, அவர்களின் எதிர்கால வாழ்வு குறித்தோ எந்தவித சிந்தனையும் கிடையாது. மாறாக தங்களின் தனிப்பட்ட நிகழ்சி நிரல்களை தமிழீழம் எனும் அடையாளத்துக்குள் மறைந்து நின்று நிறைவேற்ற நினைக்கிறார்கள்.

தனித் தமிழீழம் எனும் கனவு, முள்ளிவாய்க்காலோடு முடிந்து போய்விட்டது. தாயகத்திலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் தலைவரும் தமிழீழக் கோரிக்கையோடு அரங்கில் இல்லை. இரா.சம்பந்தன் தொடங்கி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈறாக சி.வி.விக்னேஸ்வரன் வரை யாரும் தமிழீழம் பற்றி வாயே திறப்பதில்லை. ஏனெனில் அதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. அப்படிப்பட்ட நிலையில், “அரசியல் தீர்வு தேவையில்லை தமிழீழம்தான் வேண்டும்” என்று கோசம் எழுப்பும் புலம்பெயர் தேசத்து துருவக்குழுக்களுக்கு முன்னால், தாயகத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும், அவர்களை தங்களது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு வாக்களித்து அனுப்பும் மக்களும் துரோகிகளே.

தமிழ்த் தேசிய அரசியல் யாருக்கானது என்கிற அடிப்படைப் புரிதல் தமிழ்த் தேசியம் பேசும் தரப்புக்கள் பலவற்றுக்கே இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக புலம்பெயர் தேசத்து குழப்பம் விளைவிக்கும் இவ்வாறான துருவக்குழுக்களுக்கு கிஞ்சித்தும் இருப்பதில்லை. இந்தக் குழுக்களில் கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்துக்காக சேர்க்கப்பட்ட பொருந்தொகைப் பணத்தினை சுருட்டியவர்களும், அவர்களின் ஏவலாளிகளுமே அதிகம். அவர்களின் பசப்பு வார்தைகளுக்கு மயங்கி அதீத உணர்ச்சிவசப்படும் சிலரும் கூட சேர்ந்து கொள்கிறார்கள். இவர்கள், தாயகத்திலுள்ள மக்களின் மனங்களை மாத்திரமல்ல, புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களின் மனங்களையும் புரிந்து கொண்டவர்கள் இல்லை. தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ்த் தேசிய அடையாளத்தையும், புலம்பெயர் தமிழ் மக்களின் அடையாளத்தையும் கபளீகரம் செய்து கொள்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான பன்னிரண்டு ஆண்டுகால வாழ்க்கையை தாயகத்திலுள்ள மக்கள் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தக் காலப்பகுதி மக்களுக்கு அதீத புரிதல்களை வழங்கியிருக்கின்றது. அரசியல் ரீதியாக இலக்குகளை நோக்கி எவ்வாறு நகர வேண்டும், அதற்கு எவ்வாறான நடைமுறை தற்போதுள்ள சூழலில் பொருத்தமானது என்பது தெரியும். இன்றைக்கு யாராவது வந்து ‘தமிழீழம்தான் ஒற்றைத் தீர்வு, அதற்காக போராட வேண்டும்’ என்று கோரினால் அதனை காது கொடுத்து கேட்கக்கூட மாட்டார்கள். தேசியத் தலைவர் பிரபாகரனாலும் அவரோடு அணி வகுத்த பல்லாயிரக்கணக்கான உறவுகளினாலும் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழீழத்தை எந்தவொரு கொம்பனாலும் தற்போது பெற்றுக் கொடுக்க முடியாது என்பது மக்களுக்கு தெரியும். ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத்துக்கான அர்ப்பணிப்புக்கு முன்னால், எந்தவொரு தரப்பும் நிற்கவே முடியாது. அப்படியான நிலையில், புலம்பெயர் தேசத்து துருவக்குழுக்களின் பேத்தல் பேச்சுக்களை மக்கள் கண்டு கொள்வார்கள் என்பது வெறும் மடைத்தனம். இன்றைக்கு தமிழீழம்தான் தீர்வு என்று பேசும் தரப்புக்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் ஊடாக கவனத்துக்காகவே பேசுகின்றன.

சுமந்திரனுக்கு எதிராக கனடா சந்திப்பில் குழப்பம் விளைவித்தவர்களை சமூக ஊடகங்களில் சிலர் ஆரம்பத்தில் வெகுவாக வரவேற்று எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில், புலம்பெயர் தேசத்து அறிவார்த்த தரப்புக்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களும், தாயகத்தில் தங்களை கல்வியாளர்களாக கடந்த காலத்தில் முன்னிறுத்திய ஒரு சிலரும் அடக்கம். ஆனால், சுமந்திரனுக்கு எதிரான குழப்பம் தாயகத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ மக்களினால் இரசிக்கப்படவில்லை என்பது சில மணித்தியாலங்களுக்குள் தெரிந்ததும் அவர்கள் பதுங்கிக் கொண்டுவிட்டார்கள். குழப்பம் விளைவித்தவர்களை கொண்டாடியவர்களில் அநேகருக்கு சுமந்திரன் என்கிற அரசியல்வாதி, தனி மனிதன் மீதான காழ்ப்புணர்வே காரணமாக இருந்திருக்கின்றது. மாறாக, அவர்களிடத்தில் தமிழீழத்துக்கான அர்ப்பணிப்பு கிடையாது. தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, கோபதாபங்களைக் காட்டுவதற்காக எந்தவொரு கீழ் நிலைக்கும் செல்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தான் அது காட்டுகின்றது.

உரிமைகளுக்காக போராடும் எந்தவொரு சமூகமும் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் அப்பால் யாரையும் தலைவர்களாக முன்னிறுத்தக்கூடாது. அது அந்தச் சமூகத்தை படுகுழிக்குள் வீழ்த்திவிடும். உரிமைகளைப் பெற்றுவிட்டாலும் சிலவேளை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் நிற்கும் சூழலை உருவாக்கிவிடும். அதனால்தான், போராடும் எந்தவொரு சமூகமும் தனக்குள் ஜனநாயக நெறிகளைப் பேண வேண்டும் என்கிற விடயம் சொல்லப்பட்டு வருகின்றது. அதுதான், தலைவர்கள் தவறிழைக்கும் போது கேள்விகளை எழுப்ப வைக்கும். அப்படியான நிலையில், தமிழ்த் தேசியத்தின் பேரினால் அரசியல் செய்கின்ற யாரும் கேள்விகளுக்கோ, விமர்சனத்துக்கோ அப்பாற்பட்டவர்கள் இல்லை. சுமந்திரனும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்தான். அவர் கடந்த காலங்களில் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதிலளித்தும் வந்திருக்கிறார்.

ஆனால், கனடா சந்திப்பில் சுமந்திரன் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று குறிப்பிட்டு விடயத்தை மடைமாற்ற சிலர் முனைகிறார்கள். அந்தச் சந்திப்பில் சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்த போதுதான், குழப்பம் விளைவிக்கப்பட்டது. ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் பிரதான அழைப்பாளர், தன்னுடைய நிலைப்பாடுகளை முதலில் தெளிவுபடுத்திவிட்டுத்தான், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதுதான் வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக, பிரதான அழைப்பாளர் தன்னுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்னாலேயே கேள்விக்கு பதிலளிக்க கோருவது வேறு நோக்கங்கள் சார்ந்தது. சுமந்திரனின் கூட்டத்தைக் குழப்ப வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்கு என்ன காரணத்தைச் சொல்லியும் செய்யலாம். அந்தக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களினால் விடுக்கப்பட்ட, “…கூட்டத்தை முடித்து சுமந்திரனை அனுப்புங்கள், இல்லையென்றால் விளைவுகள் பெரிதாகும்..” என்ற மிரட்டல், அதன் பிரதிபலிப்புத்தான். அப்படிப்பட்ட நிலையில், கேள்விக்கு அப்பாலானவர் இல்லை சுமந்திரன், ஆகவே, குழப்பம் விளைவித்தவர்கள் நேர்மையான நோக்கம் கொண்டவர்கள் என்று யாராவது நியாயப்படுத்தினால் அது அயோக்கியத்தனமானது.

சுமந்திரன் எந்தவொரு தருணத்திலும் தனித் தமிழீழம் தன்னுடைய அரசியல் இலக்கு என்று சொன்னதில்லை. அதனைத் தெரிந்து கொண்டுதான் தாயகத்து மக்கள் அவரை தங்களின் பிரதிநிதியாக தெரிவு செய்திருக்கிறார்கள். தன்னுடைய நிலைப்பாடுகளை சந்திப்பொன்றில் வெளிப்படுத்துவது அவருக்கான உரிமை. கனடா சந்திப்பில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஏற்கனவே தாயக மக்களிடம் வெளிப்படுத்தப்பட்டவை. அப்படியிருக்க குழப்பவாதிகளை யாராவது நியாயப்படுத்த முனைந்தால், அவர்களின் நோக்கமும் வேறு மாதிரியானது என்றுதான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அது தாயகத்து தமிழ் மக்கள் சார்ந்தது இல்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction