பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துவதற்கான சட்ட வரைபினைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சு ஏற்கனவே தயாரித்து வரும் சட்டத் திருத்தங்களை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைத்தல் என்கிற விடயங்களுக்காகவே குறித்த ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. 13 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த செயலணியில் 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் அடங்குகின்றனர். தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.
ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இனவாத – மதவாதத் தீயை வளர்த்து அதில் குளிர்காய்ந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது தென் இலங்கை ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான எண்ணம். அதன் ஒரு கட்டமாகவே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணி, ராஜபக்ஷக்களினால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று கொள்ள முடியும்.
ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி பீடமேறிய போது 69 இலட்சம் வாக்குளைப் பெற்றறனர். அது, பாராளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவியது. பிரிவினைவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்து, துரித அபிவிருத்திப் பாதையில் நாட்டைச் செலுத்துவதுதான் எண்ணம் என்று ராஜபக்ஷக்களும், அவர்களின் ஆதரவு சக்திகளும் தென் இலங்கை பூராவும் பெரும் நம்பிக்கையை ஊட்டியே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால், அவர்களின் நம்பிக்கை வாக்குறுதிகள், சில மாதங்களுக்குள்ளேயே காணாமற்போயின. இன்றைக்கு மக்கள் ஏற்கனவே இருந்த ‘நல்லாட்சி’ அரசை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுமளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. நாட்டின் பணவீக்கம் என்பது அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில், பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது. சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த ஒரு வருட காலத்துக்கு மூன்று நான்கு தடவைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக அரிசிக்கான விலை அதிகரிப்பு என்பது அரசாங்கத்தினால் கொஞ்சமும் கட்டுக்குள் கொண்டுவர முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் அரிசிக்கான விலைகள் அதிகரித்திருக்கின்றன.
ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கால வரலாற்றில், அவர்கள் மீது தென் இலங்கை மக்கள் அதிக அதிருப்தியோடு இருப்பது இப்போதுதான். ராஜபக்ஷக்களின் முதல் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் கடுமையாக மீறப்பட்ட தருணங்களிலும் கூட நாட்டை பிரிவினைவாதிகளிடம் இருந்து மீட்டவர்கள் என்பதை காட்டி ராஜபக்ஷக்களை நியாயப்படுத்தியவர்கள் தென் இலங்கை மக்களில் குறிப்பிட்டளவானவர்கள். ஆனால், இப்போது, அவர்கள் ராஜபக்ஷக்களை நாட்டை வெளிநாடுகளுக்கு விற்றுத் தீர்த்த தரப்பினராக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அது, தேர்தல் காலத்தில் படுமோசமாக தாக்கும் என்பதை ராஜபக்ஷக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே அனைத்து மாகாண சபைகளும் தங்களுடைய பதவிக் காலத்தை இழந்து புதிய தேர்தலுக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றன. அப்படியான நிலையில், விரும்பினாலும் இல்லையென்றாலும் அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தியே ஆகவேண்டிய நெருக்கடி அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், தற்போதுள்ள நிலையில் தேர்தலைச் சந்திப்பதற்கு ராஜபக்ஷக்கள் தயாராக இல்லை. தேர்தல் நடத்தப்பட்டால் வரலாற்றில் காணாத தோல்வியொன்றை தாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களின் எண்ணம். அதனால்தான், ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு தென் இலங்கை மக்களை திசை திருப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
மக்கள் அனைவரும் சமமானவர்கள், அவர்களை வேற்றுமை படுத்தக்கூடாது என்பதுதான் மனித உரிமைகளின் அடிப்படை. நாட்டின் அரசியலமைப்பும் நாட்டிலுள்ள அனைவரையும் ஒரே மாதிரியாக அணுகும் நிலையோடு பேணப்பட வேண்டும். ஆனால், இலங்கையின் அரசியலமைப்பு எந்தவொரு தருணத்திலும் நாட்டு மக்களை ஒரே நிலையில் அணுகவில்லை. குறிப்பாக, பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கியதன் மூலம், நாட்டின் பெரும்பான்மையான பௌத்த சிங்கள மக்கள் ஏனைய இன, மத மக்களை விட மேன்மையானவர்கள், சிறப்புரிமை பெற்றவர்கள் என்கிற நிலை பேணப்படுகின்றது. அவ்வாறான சிந்தனையின் அடிப்படையில் நின்றுகொண்டிருக்கும் ராஜபக்ஷக்களும் அவர்களின் இணைச் சக்திகளும், இன்றைக்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற விடயத்தைக் கையிலெடுக்கிறார்கள். அது, முஸ்லிம்களின் திருமணச் சட்டம், வடக்கில் பேணப்படும் தேச வழமைச் சட்டம், கண்டிய திருமணச் சட்டம் ஆகியவற்றின் மீது மாற்றங்களைச் செய்யும் நோக்கிலானவை. ஆனால், முஸ்லிம்களின் திருமணச் சட்டத்தினை இல்லாமற் செய்வதுதான் ஒரே நாடு ஒரே சட்டத்தின் பிரதான நோக்கம். ஏனெனில், முஸ்லிம்களின் திருமணச் சட்டம், அவர்களின் மார்க்க சிந்தாந்தத்தோடு சம்பந்தப்பட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். அப்படியான நிலையில், முஸ்லிம்கள் இயல்பாக ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற நிலைப்பாட்டுக்கு எதிர்வினையாற்ற தொடங்குவார்கள். அதனைக் காட்டி, தென் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை வளர்க்கலாம் என்பது ராஜபக்ஷக்களின் நோக்கம். அதன் ஒரு கூறாகத்தான், குறித்த ஜனாதிபதிச் செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ஞானசார தேரரும் அவரின் பொதுபல சேனாவும் ராஜபக்ஷக்களின் முதல் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மதவாத சிந்தனையோடு அரங்கிற்கு வந்தவர்கள். அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, பொதுபல சேனாவின் அலுவலகமொன்றை காலியில் திறந்தும் வைத்திருக்கிறார். முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டமை, அளுத்கம கலவரம் தோற்றுவிக்கப்பட்டமை உள்ளிட்டவற்றோடு ஞானசார தேரரும் பொதுபல சேனாவும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டுக்கள் இன்றும் உண்டு. அத்தோடு, இலங்கை அரச புலனாய்வுத் துறையின் ஒரு கருவியே பொதுபல சேனா என்கிற சந்தேகங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அப்படியான நிலை இன்னும் இருக்கின்ற நிலையில், ஞானசார தேரர், ஒரு நாடு ஒரு சட்டம் பற்றிய ஜனாதிபதி செயலணிக்கு தலைமையேற்கிறார் என்றால், அதனை எப்படி நேர் எண்ணத்தோடு நோக்க முடியும்.
முஸ்லிம் திருமணச் சட்டம், காதி நீதிமன்றங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்குள் தீர்க்கமான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அளவுக்கு, முஸ்லிம் திருமணச் சட்டம் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இந்தப் பத்தியாளருக்கு இல்லை. ஆனால், ஞானசார தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற செயலணி, திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்களை உசுப்பேற்றிவிடும் அளவுக்கான காரியத்தை ஆற்றும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் மிக முக்கிய பிரச்சினை. ஏனெனில், ராஜபக்ஷக்களினதும், ஞானசாரவினதும் கடந்த கால வரலாறுகள் அப்படித்தான் இருக்கின்றன.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது அனைத்து இன மக்களினதும் பாரம்பரிய உரிமைகளையும், மத மார்க்க நம்பிக்கைகளையும் பேணிக்கொண்டு மேலெழுமாக இருந்தால், அது வரவேற்கக் கூடியது. ஆனால், அதற்கான எந்த எண்ணப்பாடுகளையும் கொண்டிராத தரப்பினால், முன்னெடுக்கப்படும் போதுதான் பேரச்சம் ஏற்படுகின்றது.
-ஒக்டோபர் 27, 2021 எழுதப்பட்ட பத்தி.