free website hit counter

ரணில் ஏந்திவரும் ‘13வது திருத்தம்’ எனும் மாய மான்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணத்தோடு இருக்கும் அவர், இனி வரும் நாட்களை தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை வகுக்கவும் செயற்படுத்தவும் செலவளிப்பார்.

புதிய தேர்தல் கூட்டணி ஒன்றுக்காக புதிய நண்பர்கள் பலரை தேட வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் நட்போடு இருந்த பலரும் இப்போது அவரின் அரசியல் எதிரிகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நண்பர்களை தேடிக் கொள்வது என்பது அவருக்கு தவிர்க்க முடியாதது. அதற்காக அவர், அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் என்பதுதான் அவரின் அரசியல் சாணக்கியத்தனத்தைக் காட்டுகின்றது.

ராஜபக்ஷக்கள் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டதும், அதனால் ஜனாதிபதியானவர் ரணில். அவரை, மக்களினால் தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாகவோ, ஆட்சியாளராகவோ எந்தவொரு தரப்பும் கருதவில்லை. அதனால்தான், ரணிலோடு மிக இணக்கமாக இருக்கும் இந்தியா கூட, அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று ஒரு வருடத்துக்குப் பின்னர்தான் புது டில்லிக்கு அழைத்தது. தன்னை யார் என்ன கூறினாலும் பரவாயில்லை. இந்தியாவும் மேற்கு நாடுகளும் இலங்கையின் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது ரணிலின் பெரும் அவா. ஆனால், அவரது ஆசை அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறிவிடவில்லை. அதனை நிறைவேற்றுவதற்கு அவர் பல இராஜதந்திர விடயங்களை நிகழ்த்த வேண்டி வந்திருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவை மகிழ்விப்பதற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு தான் எப்போதும் விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதனால்தான், அவர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்ததை தீர்வாக முன்வைக்கிறார். அதுவும், பொலிஸ் அதிகாரமற்ற 13வது திருத்தத்தை தீர்வாக முன்வைக்கிறார்.

13வது திருத்தம் என்பது இலங்கையின் எந்தத் தரப்பினாலும் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அதனை, தங்களின் பிரச்சினைக்கான தீர்வுத் பொதியாக தமிழ் மக்கள் ஒருபோதும் கருதியதுமில்லை. தெற்கைப் பொறுத்தளவில், 13வது திருத்தம் என்பது நாட்டை பிளக்கும் இந்தியாவின் ஏற்பாடு என்பது தொடரும் எண்ணப்பாடு. அந்த எண்ணப்பாட்டினை பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளும், இனவாத அரசியல்வாதிகளும் ஏற்படுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள். 13வது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதே அதனிடத்தில் சமஷ்டிக் ஆட்சிக்குரிய எந்தக் குணாதிசயமும் காணப்படவில்லை. பின்னராக, 13வது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டபோது, மாகாணங்களின் அதிகார அலகு என்பது, மாவட்ட செயலகங்களையும் விட குறைவானது என்றானது. அதிக நேரங்களில் ஒரு மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) கொண்டிருக்கும் அதிகாரங்களைக் கூட மாகாண முதலமைச்சர் கொண்டிருப்பதில்லை. தன்னுடைய அதிகார விடயங்களுக்காகவே, மாவட்டச் செயலாளரை அணுக வேண்டிய, அனுமதிபெற வேண்டிய நிலை உண்டு. இதுதான், 13வது திருத்தத்தின் பிரகாரம் உருவான மாகாணங்களில் அதிகார வரம்பு. மாறாக, இந்திய மாநிலங்கள் கொண்டிருக்கின்ற எந்த அதிகாரத்தையும் இலங்கையின் மாகாணங்கள் கொண்டிருப்பதில்லை. ஏன், இந்தியாவின் புதுச்சேரி, சண்டிகர் போன்ற ஒன்றியப் பகுதிகள் (யூனியன் பிரதேசங்கள்) கொண்டிருக்கும் அரை மாநில அதிகாரத்தைக் கூட இலங்கையின் மாகாணங்கள் கொண்டிருப்பதில்லை.

13வது திருத்தத்துக்கு விசுவாசமாக இருக்கிறேன், என்பதன் மூலம் இந்தியாவை குளிர்த்துவிடலாம் என்பது ரணிலின் முதல் விடயம். அடுத்தது, 13வது திருத்தத்தை கையில் எடுத்தால் அதனை தமிழ்த் தரப்புக்கள் குறிப்பாக கட்சிகள் பெரிதாக எதிர்க்காது என்பது அவரின் நிலைப்பாடு. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்த தலைவர் என்ற பெயரை தான் எடுத்துக் கொள்வதோடு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் தமிழ் மக்களின் வாக்குகளை முழுமையாக அள்ளிவிடாலாம் என்பது அவரின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர், தமிழ்க் கட்சிகளிடம் 13வது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் தவிர்த்து நிறைவேற்றுவதாக புதிய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். அவரின் ஆட்டத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், ஜனநாயகப் போராளிகள் என்பன இசைந்துவிட்டன. அதிலும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் ரணிலின் தூதுவன் போலவே செயற்படத் தொடங்கியிருக்கிறார். 13வது திருத்தத்தை தமிழ் மக்களின் தீர்வாக கொண்டுவரும் நோக்கத்தை விக்னேஸ்வரனிடமும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரிடமும் யார் விதைந்துரைத்தார்கள் என்பது தெரியவில்லை. ஏனெனில், தமிழ்த் தேசியத்தின் பெயரினால் தமிழ் மக்கள் 13வது திருத்தத்தை தமக்கான தீர்வாக கோரும் அங்கீகாரத்தை ஒருபோதும் ஒருவருக்கும் வழங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், சமஷ்டித் தீர்வுக்காக மக்களின் ஆணையைக் கோரிய இந்தக் கட்சிகள், இப்போது யாரின் மனதைக் குளிர்விப்பதற்காக 13வது திருத்தத்துக்குள் சுருங்க நினைக்கின்றன என்கிற கேள்வி முக்கியமானது.

பொலிஸ் அதிகாரம் அற்ற 13வது திருத்த நிறைவேற்றம் என்ற பந்தை ரணில் தமிழ்த் தரப்பிடம் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்காக களமாடுவதற்கு சி.வி.விக்னேஸ்வரனையும், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் செயலாளராக இருந்த க.விக்னேஸ்வரனையும் இறக்கியிருக்கிறார் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. இந்தியாவிலிருந்து வந்த அடுத்த நாட்களிலேயே, இரு விக்னேஸ்வரன்களையும் அழைத்து, 13வது திருத்த நிறைவேற்றம் பற்றி ரணில் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்பில் ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று தாம் கோரியிருப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் கூறியிருக்கிறார். அதாவது, புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்துக்கான பொலிஸார் கொண்டிருக்கின்ற தடிகளைக் கொண்டிருக்கிற அதிகாரம். அது உண்மையில் அதிகாரக் கட்டமைப்புக்குள் எந்த வகையிலும் வராது. ஏனெனில், வீதி ஒழுங்கை பேணும் வேலைக்கு ஒப்பான ஒன்று. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் அதிகாரம் என்பது முழுமையாக நடைமுறைக்கு வர வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரி போன்ற ஒன்றியப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினருக்கு காணப்படும் அதிகாரம் போன்ற விடயத்தை, வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் எடுத்துக் கொள்ளுவார்கள். அது, சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்காது. மாறாக, இராணுவப் பிரசன்னம் என்பது, எந்த இடத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அதனை முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரியவில்லை. மாறாக, அவர், இந்தியாவின் ஆணைக்கு அமைய தென் இலங்கையின் விசுவாசியாக செயற்படுகிறார் என்பதாக உணர வேண்டி ஏற்படுகின்றது.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் எண்ணம் தனக்கு உண்டு என்று கூறும் ரணில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது பாராளுமன்றம் என்கிறார். அவர் வாய்ப்பேச்சில் எதை வேண்டுமானாலும் கூறிவிடலாம். ஆனால், அதனை நிறைவேற்ற பாராளுமன்ற பெரும்பான்மை அவசியம். அந்தப் பெரும்பான்மை என்பது இன்னமும் ராஜபக்ஷக்களிடமே இருக்கின்றது. ஏற்கனவே, ராஜபக்ஷ அணியிலுள்ள பல தரப்புக்களும் ரணில் மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில், தற்போதுள்ள பாராளுமன்றத்தில் 13வது திருத்தம் பற்றிய எந்த விவாதமோ, விடயமோ வந்தாலும் அது தோற்கடிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில், நடைமுறைக்கு வரமுடியாத ஒன்றை, ரணில் தீர்வுப்பொதி போல தள்ளுவதும், அதனை, விக்னேஸ்வரனும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் முதுகில் சுமப்பதும் அபத்தமானது. 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்துவதை தாம் ஏற்கோம் என்று ரணிலின் அமைச்சரவைச் சகாக்களே, தமிழ்க் கட்சிகளுடனான பேச்சு மேடையில் வெளிப்படையாக கூறுகிறார்கள். அதற்கு, ரணிலும் நீங்கள் அதை பாராளுமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்படிப்பட்ட நிலையில், ரணில் 13வது திருத்தத்தை கையில் எடுத்துக் கொண்டு இப்போது ஆடுவது தேர்தலுக்கு ஆட்களைப் பிடிக்கும் ஆட்டம் மட்டுமே.

ஏனெனில், 13வது திருத்தத்தில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை நீக்கம் செய்யும் நோக்கில் 22வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரப்போவதாக உதக கம்மன்பில அறிவித்திருக்கிறார். அப்படியொரு திருத்தம் பாராளுமன்றத்துக்கு வந்தால், அது இலகுவாக நிறைவேறிவிடும். ஏனெனில், அதற்கான பாராளுமன்றப் பெரும்பான்மையை இன்றைய ஆளும் தரப்பு கொண்டிருக்கின்றது. 13வது திருத்தத்தை தீர்வுப் பொதியாக முன்வைத்துவிட்டு, அதில் எழுத்து வடிவில் காணப்படும் பொலிஸ் அதிகாரத்தையும் நீக்கும் வேலைகளை ரணில் செய்கிறார். அதற்காக அவர், தென் இலங்கையின் இனவாத சக்திகளை மறைமுகமாக துணைக்கு அழைத்திருக்கிறார். அதன்மூலம், ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையினரின் வாக்குகளை வாரிச் சுருட்டலாம் என்பது அவரின் எதிர்பார்ப்பு. இவ்வாறான தகிடு தித்தங்களைப் புரிவாதற்காகத்தான் ரணில் 13வது திருத்தத்தை இப்போது கையில் ஏந்தியருக்கிறார். அதனைப் புரிந்து கொண்டு அரசியலை இராஜதந்திர புள்ளியில் நின்று தமிழ்த் தரப்புக்கள் கையாளப் பழக வேண்டும். மாறாக, வேறு தரப்புக்களின் ஏவல் கருவிகளாக இருந்து மக்களின் ஆணைக்கு மாறாக செயற்படத் தேவையில்லை. அது, தமிழ் மக்களை இன்னும் மோசமாக தோற்கடிக்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction