free website hit counter

4தமிழ்மீடியாவின் வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மெக்ஸிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 2:31 மணிக்கு மெக்ஸிக்கோவின் எல் டிகுய் இலிருந்து தென்மேற்கில் 3 Km தொலைவில் 19.8 Km ஆழத்தில் 6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரம் இன்னமும் வெளியாகவில்லை.

ஆனால் மெக்ஸிக்கோ தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் கூட நில அதிர்வு உணரப் பட்டுள்ளது. வரலாற்றில் மிக மோசமான நில அதிர்வுகளால் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளில் ஒன்று மெக்ஸிக்கோ. சிறிய நாடாக இருந்த போதும் 8 ரிக்டரை விட அதிகமான நில அதிர்வுகளால் அங்கு பலத்த உயிர்ச் சேதங்களும், பொருள் சேதங்களும் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளன.

1950 ஆமாண்டு முதல் இதுவரை 24 வலுவான நிலநடுக்கங்களும், இதில் சில சுனாமி அலைகளையும் கூட மெக்ஸிக்கோவில் ஏற்படுத்தியுள்ளன. இந்த நில நடுக்கங்களால் 11 300 இற்கும் மேலான பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

சீனாவில் கோவிட் சட்டம் தளர்த்தப் பட்டதை அடுத்து தீவிரமடையும் தொற்று! : மூத்த நிபுணர் தகவல்

வரலாற்றில் சீன அரசுக்கு எதிராக டினான்மென் சதுக்க மாணவர் எழுச்சியை அடுத்து முக்கிய மக்கள் எதிர்ப்பாக அங்கு சீன அரசு அண்மைக் காலமாக கடைப்பிடித்து வந்த ஷீரோ கோவிட் திட்டத்துக்கு எதிரான மக்கள் புரட்சி அமைந்திருந்தது. இதை அடுத்து சீன அரசு வேறு வழியின்றி கட்டாய கோவிட் பரிசோதனை கெடுபிடிகள் மற்றும் லாக்டவுன் போன்ற முக்கிய சட்டங்கள் உட்பட பல ஷீரோ கோவிட் திட்டங்களை சமீபத்தில் தளர்த்தியதுடன் நோய்த் தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ளவும் அனுமதித்தது.

இதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சீனாவின் உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த சீனாவின் முக்கிய மூத்த சுகாதார நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், அரசின் தளர்த்துதல் நடவடிக்கைகளுக்குப் பின் சீனாவில் மீண்டும் கோவிட் தொற்றுக்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மறுபுறம் சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள கடைகளும், உணவகங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கி அரசின் முடிவைக் கொண்டாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சீன உள்ளூர் மீடியாவில் தகவல் அளித்த சீனாவின் முக்கிய தொற்றுநோயியலாளர் ஷொங் நன்ஷான் கூறும் போது கோவிட்-19 இன் ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சேர்ந்த வைரஸ் இனங்கள் சீன மக்களிடையே இலகுவில் அதிகளவில் பரவக் கூடியது என்பதால் தொற்றுக்களின் எண்ணிக்கையை இது விரைவாக அதிகரிக்கக் கூடும் என்றுள்ளார்.

மேலும் இந்த ஒமிக்ரோன் வகை மாறுபாடு பாதிக்கப் பட்ட நபர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளா விட்டால் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு சராசரியாக 22 பேருக்கு இத்தொற்றை பரவச் செய்து விடுவார் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் சீன அரசு என்னதான் மிக நுணுக்கமாக கட்டுப்பாடுகளை மேற் கொண்டாலும் இத்தொற்று சங்கிலியை முற்றிலுமாக அறுப்பது என்பது மிகவும் கடினமானதாகும் என்றும் ஷொங் நன்ஷான் தெரிவித்துள்ளார்.

சீன அரசு ஏற்கனவே ஷீரோ கோவிட் திட்டத்தால் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருப்பதுடன், இதனால் பல மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளில் முடங்க வேண்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

ஈராக்குடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவை வலுப்படுத்துகிறது ஈரான்!

இஸ்லாமின் இரு பெரும் பிரிவுகளான சுன்னி மற்றும் ஷியா ஆகிய இரு பிரிவுகளில், உலகில் அதிகளவு ஷியா முஸ்லிம்களைக் கொண்ட சொற்ப இஸ்லாமிய நாடுகளில் ஈரானும் ஒன்று. இதன் அண்டை நாடான ஈராக்கின் சனத்தொகையிலும் குறிப்பிட்டளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

அணுவாயுதத் தயாரிப்பு காரணமாக அமெரிக்கா மற்றும் சர்வதேசத்திடம் இருந்து பெரும் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட ஈரான் தற்போது ஈராக்குடன் தனது பொருளாதார மற்றும் அரசியல் உறவினை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஈராக்கோ சமீப காலமாக தனது இரு முக்கிய கூட்டாளிகளான ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையேயும் நட்பு பாராட்டி வருகின்றது.

2003 ஆமாண்டு அமெரிக்கத் துருப்புக்களால் முற்றுகையிடப் பட்டு ஈராக்கின் சர்வாதிகாரி சதாம் ஹுஸ்ஸைன் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டதை அடுத்து அரசியல் ரீதியாக இரு நாட்டு பெரும்பான்மை ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர்கள் தமக்கிடையே உறவை வலுப்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது ஈராக்கின் பாராளுமன்றத்தில் ஈரான் சார்பு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், ஒரு வருட இழுபறிக்குப் பிறகு ஆக்டோபரில் ஈராக்கில் புதிய பிரதமர் அறிவிக்கப் பட்டார். இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார ஆதாரமாக ஈராக் மாறியுள்ளது என பக்தாத் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிஞர் இஹ்சான் அல் சம்மாரி தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான உறவு வலுப்பட்டு வரும் அதே நேரம் ஈராக்கில் இருந்து பெருமளவிலான அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறி விட்டுள்ளன. இன்னமும் இஸ்லாமிய தேசப் போராளிகளுடன் போராடுவதற்காக சுமார் 2500 அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் முகாமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஜி7 நாடுகளது முடிவுக்கு எதிரான இந்திய அரசின் தீர்மானம்! : ரஷ்யா ஆதரவு

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் பெப்ரவரி முதற்கொண்டு 9 மாதமாக முடிவில்லாமல் தொடர்கின்றது. இதனால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளிலும், உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டு ஐரோப்பா உட்பட உலக நாடுகளது பொருளாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. போரை நிறுத்த வேண்டி பல உலக நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்தவாறும் தான் உள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை ஜி7 நாடுகளது கூட்டணி ரஷ்ய கச்சா எண்ணெய்யின் விலையை ஒரு பீப்பாய் 60 டாலராகக் குறைக்க ஒப்புக் கொண்டன. உக்ரைன் போருக்கான ரஷ்ய செலவில் தாக்கம் ஏற்படுத்தவும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை வீழ்த்தவும் என இம்முடிவு எடுக்கப் பட்டது. இதை அடுத்து ரஷ்ய அதிபர் புடின் தமது கச்சா எண்ணெய்க்கான விலையின் உச்சவரம்பை நிர்ணயிக்கும் நாடுகளுக்கு நாம் கச்சா எண்ணெய் அளிக்க மாட்டோம் என அறிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய உயர் அதிகாரிகள், இந்த முடிவானது சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றும் நுகர்வோர் இதனால் பாதிப்படைவர் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஜி7 நாடுகளது இந்த முடிவை ஏற்க மாட்டோம் என இந்திய அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ரஷ்யா தற்போது கரும் கடலின் ஒடெசா பகுதி துறை முகங்களின் சக்தி வலையமைப்புக்களில் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆனாலும் இப்பகுதியினூடாக நடைபெற்று வரும் தானிய ஏற்றுமதி கப்பல் வர்த்தகத்தை நிறுத்தும் எண்ணம் எமக்கு ஒருபோதும் கிடையாது என ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் விவசாய அமைச்சர் மிக்கோலா ஷொல்கி தெரிவித்துள்ளார்.

சிக்கல்கள் நிச்சயம் உள்ளன. ஆனாலும் எந்த ஒரு வியாபாரியும் இந்த வர்த்தகத்தை நிறுத்தப் போவதாகப் பேசவில்லை. மாறாக இந்தத் துறைமுகங்கள் மாற்று சக்தித் துறைகளைப் பயன்படுத்தித் தமது வர்த்தகத்தைத் தொடர்கின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 


மனிதனால் உருவாக்கப் பட்ட எதுவும் எமது பால்வெளி அண்டத்தைத் தாண்டியுள்ளதா?

நாம் வாழும் பூமி மற்றும் சூரிய குடும்பம் என்பன பால்வெளி அண்டத்தில் (Milky Way Galaxy) இல் அதன் மையத்தில் இருந்து 27 000 ஒளியாண்டுகள் (Light Years) தொலைவில் அமைந்துள்ளன. வெற்றிடத்தில் ஒளி 1 செக்கனுக்கு எப்போதும் மாறிலியாகவும், சராசரியாக 3 இலட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் என்பதை அடிப்படையாக வைத்து ஒளியாண்டு என்ற அதிகபட்ச தூர அளவு நம்மால் வானியலில் பயன்படுத்தப் படுகின்றது.

அப்படியானால் 27 000 ஒளியாண்டுகள் என்பது எத்தனை Km கள் எனத் தேவைப் பட்டால் நீங்கள் கணித்துப் பாருங்கள்.. நமது பால்வெளி அண்டத்தின் விட்டம் 105, 700 ஒளியாண்டுகள் ஆகும். பல டிரில்லியன் கணக்கான அண்டங்களைக் கொண்ட நம் கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சத்தில் (Observable Universe) பால்வெளி அண்டத்துக்கு அருகே உள்ள பெரும் அண்டம் அண்டிரோமீடா (Andromeda Galaxy) ஆகும்.
இது பூமியில் இருந்து 2.5 மில்லியன் ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

பூமியில் மனிதர்களாகிய நாம் அனுப்பிய செய்மதிகளிலேயே வொயோஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகியவை மாத்திரமே கடைசிக் கிரகமான நெப்டியூன் மற்றும் புளூட்டோவைத் தாண்டியுள்ளன. மேலும் இப்போது தான் சூரிய குடும்பத்தின் விளிம்பில் இருந்து பால்வெளி அண்டத்தின் எல்லையை நோக்கியுள்ள தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன. இந்த எல்லையை செய்மதிகள் வந்தடையவே இன்னும் 30 000 இற்கும் அதிகமான வருடங்கள் ஏற்படும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. அப்படியாயின் மனிதர்களால் உருவாக்கப் பட்ட எதுவுமே அதன் அருகே இருக்கும் அண்டத்தை இதுவரை அடைந்ததில்லையா என்ற கேள்வி உங்களுக்கு ஏற்படலாம்?

இதற்குப் பதில் நிச்சயமாக இல்லை தான். ஆனால் வானவியல் கல்வியின் அடிப்படையில் பார்த்தால் இதற்குப் பதில் ஆம் என்றும் கூறலாம். இது எப்படி சாத்தியம்? மறுபடியும் ஒளியின் வேகத்துக்கே வருவோம். பிரபஞ்சத்தில் மிக அதிகபட்ச வேகம் ஒளியின் வேகம் என்பதும் அது வெற்றிடத்தில் எப்போதும் மாறிலி என்பதும் வானியலின் அடிப்படையாகும். எமது மனிதர்களது மூதாதையர்களான ஹோமோ சேப்பியன்கள் 2 இலிருந்து 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் பூமியில் வாழ்ந்தார்கள். நவீன மனிதனின் அறிவுத்திறன். கருவிகளை ஆக்கும் திறன் என்பவை இவர்களிடம் இருந்தே எமக்குக் கடத்தப் பட்டது.

ஆனால் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் இருக்கவில்லை. இவர்களது மூதாதையர்கள் அல்லது மனிதப் பரிணாமத்தின் ஆரம்ப நிலை மூதாதையர்கள் தொடர்ச்சி பூமியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளனர். இவர்கள் முதன் முறையாக இரவுப் பொழுதில் உணவு சமைத்த போது பாவித்த நெருப்பு, அதில் இருந்து புறப்பட்ட ஒளியின் போட்டோன் துகள்கள் அல்லது அலைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியில் இருந்து வெற்றிடத்தில் பயணித்திருக்க முடியும். அவை செறிவில் எந்தளவு குறைவாக இருந்த போதும்..

இந்த போட்டோன்களை அண்ட்ரோமீடியா அண்டத்தில் உள்ள மனிதனை விட தொழிநுட்ப வளர்ச்சியில் மிகவும் கூர்மையான உயிரினம் எதுவும், தமது கருவிகள் மூலம் இப்போது உள்வாங்கிக் கொண்டிருக்கவும் முடியும் என்றும் கூறுவதற்கு வாய்ப்புள்ளதல்லவா? எனவே பூமியில் மனித இனத்தின் மூதாதையர்கள் முதலில் உருவாக்கிய நெருப்பின் போட்டோன் துகள்கள் தான் இன்றைய மனிதனின் எந்தவொரு ஆக்கத்துக்கும் முன்பே பூமிக்கு அருகே இருக்கும் அண்டத்தை சென்றடைந்திருக்கக் கூடிய அம்சங்கள் எனக் கூறுவதில் வானியல் அடிப்படையில் எந்த விதத் தவறுமில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction