இத்தாலியில் காசாவை ஆதரித்து யூனியன் சிண்டகேல் டி பேஸ் (USB) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து, இத்தாலி முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பல இடங்களிலும், வன்முறைகள் வெடித்தன.
இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலும், பொது போக்குவரத்து (ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள்) முதல் பள்ளிகள் வரை அனைத்து துறைகளிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் பல இடங்களிலும், சாலைப் போக்குவரத்துக்கள் மற்றும் ரயில்களில் போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டன.
தலைநகர் ரோமிலும், வர்த்தக நகரான மிலானிலும் பதற்றம் அதிகமாக இருந்ததாகவும், பின்னர் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதனால் காவல் துறைக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாகவும் தெரிய வருகிறது.
இவ்வாறான மோதல்களின் விளைவாக குறைந்தது ஒரு டஜன் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. "அனைத்தையும் தடு," "பாலஸ்தீனத்தை விடுவி." "பாலஸ்தீனத்தில் நடந்தது இனப்படுகொலை " என்பது போன்ற கோஷங்களுடனும், பதாகைகளுடனும், ஆர்பாட்டக்காரர்கள் அணியணியாக சாலைகளை நிறைத்தனர்.