உலகை உலுக்கிக் கொண்டிருந்த அமெரிக்க, இஸ்ரேலிய - ஈரான் போரினை இரு வாரகாலத்துக்கு இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். பாக்கிஸ்தான் முன்னெடுத்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு ஈரான் சம்மதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் அமெரிக்க அதிபர் இடைக்காலப் போர் நிறுத்ததிற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.
செவ்வாய்கிழமை இரவு ஈரானுக்கு அனுப்பப்படும் அழிவுகரமான சக்தி, ஈரான் எனும் நாட்டினையும் நாகரீகத்தையும் முற்றாக அழித்துவிடும் எனும் டிரம்பின் பதட்டமான அறிவிப்பினைத் தொடர்ந்து, முழு உலகமுமே ஒரு பேரழிவிற்கான அச்சத்தினைக் கொண்டிருந்தது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசும், புரட்சிகர காவல்படையும் எத்தகைய போரினையும், எதிர்கொள்ளத் தயாரான நிலையில், ஈரானிய மக்கள் இலட்சக் கணக்கில், தாக்குதலுக்கு உள்ளாகலாம் என அறிவிக்கப்பட்டிருந்த தமது தளங்களின், பாதுகாப்பிற்காக அச்சமின்றி பெருந்திரளாக இலட்சக் கணக்கில் வீதிகளில் குவிந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் தொடர்ந்து நடத்திய இரு தரப்புப் பேச்சுவார்த்தகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்வதாக டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில்அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் பத்து அம்சக் கோரிக்கைகளுடன் போர் நிறுத்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த சில நிமிடங்களிலேயே இரு வாரகாலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அறிவித்துள்ள "இருதரப்பு போர்நிறுத்தம்" என்று விவரித்த இந்த ஒப்பந்தத்தில், போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்ட வகையில், இஸ்ரேலும் அடங்கும் என்றும், டிரம்ப் விதித்திருந்த காலக்கெடுவிற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன், இறுதி நேரத்தில் இந்த உடன்பாட்டு அறிவிப்பு வந்திருக்கிறது.
போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடன், உடனடியாக கச்சா எண்ணெய் விலை குறைந்ததாகவும், பங்குச் சந்தை உயர்ந்ததாகவும், தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, டிரம்ப் அறிவித்த போர்நிறுத்தம் குறித்து 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அவரைக் கடுமையாகச் சாடியுள்ளார்கள் அவரது ஆதரவாளர்கள்.
"நீங்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வீர்கள். மணலில் ஒரு கோடு வரைவதை நிறுத்துங்கள், ஏனெனில் நீங்கள் அதைத் திரும்பத் திரும்ப நகர்த்துகிறீர்கள்," என்று 'லூசியானா மிமி' என்ற MAGA கணக்கு 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டது. "நீங்கள் இன்னும் தீவிரவாத ஈரானியத் தலைவர்களுடன்தான் போராடுகிறீர்கள். அவர்கள் அப்படித்தான்.அவர்களைக் குண்டுமழையில் தகர்த்தெறியுங்கள்," என்று முன்னாள் ராணுவ வீரரான ஜேக்கப் ஃபோர்ன்ஷெல், 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்பின் பதிவிற்குப் பதிலளித்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம் இருவார காலமும், அதனைத் தொடர்ந்தும் தொடருமா என்பதனை அடுத்துவரும் நாட்களின் நகர்வுகள் தீர்மானிக்கும் எனலாம்.
