பிலிப்பைன்ஸின் தாவோ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:16 மணிக்கு 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.
தாவோவில் இருண்டுஹ் 67 கிலோ மீட்டர் தொலைவில் 69 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாகவும் அறியப் படுகின்றது.
நிலநடுக்கம் தாக்கி சில நிமிடங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் தீவிரமானதாக இருந்த போதும் இதுவரை கடும் சேதங்கள் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும் தெற்கு டவாவோ மாகாணத்தில் உள்ள சிறு விமான நிலையம் ஒன்றின் ஓடு பாதைகளில் சிறிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் அதிகளவு நிலநடுக்கம் தாக்கும் மற்றும் எரிமலை செயற்பாடுகள் அதிகமுள்ள பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக குறைந்தது 65 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கிறீஸ், துருக்கி மற்றும் தெற்கு இத்தாலியின் சிசிலி, மற்றும் கலப்ரியா ஆகிய தீவுகளிலும் கூட காட்டுத் தீ தாக்கி வருகின்றது. கிறீஸில் தீயணைப்பு வீரர்கள் 9 ஆவது நாளாக காட்டுத் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
துருக்கியின் வடக்கு கடற்கரைப் பகுதி ஓரமாக கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவில் வரலாற்றிலேயே 2 ஆவது மிகப் பெரும் காட்டுத் தீ துவம்சம் செய்து வருகின்றது.