website analysis

டிரம்ப்பை படுகொலை செய்ய முயற்சி; பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அரசு பதவியில் உள்ள முக்கிய நபர்களை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 48) என்பவர் அடையாளம் காணப்பட்டார்.

சதி செயல்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் தூண்டுதலின் பேரில் அவர் இந்த சதி செயலில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள பெடரல் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில், அமெரிக்க மாவட்ட நீதிபதி எரிக் ஆர். கோமிதீ தண்டனை விவரங்களை அறிவித்து உள்ளார்.

அதில், மெர்ச்சன்ட், கூலிப்படையை அமர்த்தி இந்த படுகொலைகளை செய்ய முயற்சித்து உள்ளார். இதற்காக அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அரசு வழக்கறிஞரான டாட் பிளாஞ்ச் இந்த விவரங்களை வெளியிட்டு உள்ளார்.

டிரம்ப் இலக்கு

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரான மெர்ச்சன்ட், அவராக முன்வந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் சேர்ந்து, உளவு பிரிவுக்கான பயிற்சியை பெற்றுள்ளார். இதன்பின்னர், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

சரியான இடம் தேர்வு செய்வது மற்றும் தேவையான கூலிப்படையினரை பணியமர்த்துவதற்கான வேலையிலும் ஈடுபட்டு உள்ளார். இதில், டிரம்ப்பை படுகொலை செய்ய முக்கிய இலக்காக கொண்டுள்ளார்.

இதுதவிர, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே ஆகியோரையும் அவர் இலக்காக வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான போட்டியில் இருந்தவர்கள் ஆவர்.

2020-ம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்க டிரோன் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க ஈரான் விரும்பியது. இதன் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்