ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டு தலைமை நீதிபதியும், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலரும், மூத்த அரசியல் தலைவருமான 60 வயதாகும் இப்ராஹிம் ரைசி அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
இவர் ஏழைகளின் நாயகன் என்றும் போற்றப் படுகின்றார்.
62% சதவீத வோட்டுக்களுடன் வெற்றி பெற்ற இவர் மக்கள் மத்தியில் ஏற்கனவே மிகுந்த செல்வாக்கு மிக்க நபராவார். ஈரானின் நடப்பு அதிபரான ஹசன் ரௌஹானி ஆகஸ்ட்டில் அதிபர் பதவியில் இருந்து விலகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர ஈரானின் அதியுயர் பதவியில் இருக்கும் ஆன்மிகத் தலைவரான அயதொல்லா அல் கமேனியும் தனது 82 ஆவது பிறந்த நாளுக்குப் பின் வயது மூப்பு காரணமாக பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என்றும் கருதப் படுகின்றது. இதன் பின் இந்த உயரிய பதவிக்கும் இப்ராஹிம் ரைசியே வர வாய்ப்புள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
2015 இல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் ஹசன் றௌஹானி கைச்சாத்திட்டதை இப்ராஹிம் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இப்ராஹிம் ரைசி அதீத கடும் போக்காளர் என்றும், இவர் சர்வதேசத்துக்கு அச்சுறுத்தல் ஆனவர் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்றுமொரு நடப்பு உலகச் செய்தி -
சமீபத்தில் மியான்மார் சூழல் தொடர்பாக ஐ.நா சபையில் கொண்டு வரப் பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 119 நாடுகளும், எதிராக பெலாருஸ் மட்டும் வாக்களித்தன. மியான்மார் மற்றும் அதன் அண்டை நாடுகளான இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம்,சீனா, லாவோஸ், தாய்லாந்து, ரஷ்யா உட்பட 36 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
இந்நிலையில் மியான்மாரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளும் எந்தவிதப் பலனும் அளிக்காது என ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.