வெள்ளிக்கிழமை ஈரானில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இடையூறுகள் இன்றி நடைபெற்றது.
இத்தேர்தலில் மற்ற 3 வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டு தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெறுவார் என அரச சார்புக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இவர் மிக உறுதியான நிலைப் பாட்டைக் கொண்டவர் என்றும், அதனால் இவர் அதிபரானால் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப் படுகின்றது. ஈரானின் தற்போதைய அதிபர் ரௌஹானியின் பதவிக் கால வரம்பு நிறைவடைந்து விட்டதால் அவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மியான்மார் அரசுக்கு ஆயுதங்களை இனி விற்க வேண்டாம் என உலக நாடுகளுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. பெப்ரவரியில் மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப் பட்டு அனைத்து முக்கிய அரச தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர். இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டது. இதில் 800 இற்கும் அதிகமான மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டின் மிகப் பெரும் மனித அவலமாகக் கருதப் படும் இச்சம்பவத்துக்குப் பின் ஐ.நா தொடர்ந்து மியான்மாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அரச தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய அரச தலைவர்களை விடுவிக்கக் கோரியும், அமைதியான முறையிலான போராட்டங்களுக்கு எதிரான வன்முறையை இராணுவம் கைவிட வேண்டும் என்றும் ஐ.நா அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் அடிப்படையில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த தீர்மானத்தில் 119 நாடுகள் ஐ.நாவுக்கு ஆதரவாகவும், பெலாருஸ் மட்டும் எதிராகவும் வாக்களித்தன.
ஆனால் மியான்மாருக்கு முன்பு ஆயுதம் வழங்கி வந்த இரு பெரும் வல்லரசுகளான ரஷ்யாவும், சீனாவும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.