ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஊழல் தடுப்பு அமைப்பினை ஒரு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தி மாஸ்கோ நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நாவல்னி சிறை விதிமுறைகளை மீறியுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் எதிரிகளை மூடி மறைக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையை நாவல்னியின் ஆதரவாளர்கள் விமரிசித்துள்ளனர்.
நாவல்னியின் FBK என்ற இந்த அமைப்பின் மீதான தடையுத்தரவின் மூலம் இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள், இந்த அமைப்புக்கு நன்கொடை அளிப்பவர்கள், இந்த அமைப்பின் பிரச்சாரத்தை பரப்புவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு நீண்ட கால சிறைத் தண்டனை பெற முடியும். ரஷ்யாவின் மிதவாதிகள் அல்லது தீவிரவாதிகளுக்கான பட்டியலில் ஏற்கனவே 30 இற்கும் அதிகமான அமைப்புக்கள் உள்ளன. இதில் ISIS ஆயுதக் குழு, அல் கொய்தா, மற்றும் ஜெஹோவா விட்னெஸ்ஸெஸ் ஆகியவையும் அடங்குகின்றன.
புட்டினின் மிக முக்கிய எதிராளியாகக் கருதப்படும் நாவல்னி விஷத் தாக்குதலுக்குப் பின் ஜேர்மனியில் 5 மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று அதன் பின் ரஷ்யா திரும்பியிருந்தார். 44 வயதாகும் நாவல்னியை ஜனவரியில் கைது செய்த ரஷ்ய அரசு அரச நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றம் சாட்டி அவருக்கு 2 1/2 ஆண்டு கால சிறைத் தண்டனையை அளித்தது.
இந்நிலையில் FBA அமைப்பின் மீதான தடையுத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்யவிருப்பதாக நாவல்னி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.