கிறீஸ் நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியாவில் ஆகஸ்ட் 3 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை மிகவும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் பல கிராமங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன் பெரும்பாலான பொது மக்கள் வெளியேற்றப் பட்டு வருகின்றனர். இதில் பல சுற்றுலாப் பயணிகளும் அடங்குகின்றனர்.
குறிப்பிடத்தக்க வீடுகளும், வணிக நிறுவனங்களும் கூடத் தீக்கிரையாகியுள்ளன. சில தினங்களாக வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் வரை கூட உயர்ந்துள்ளது. சுமார் 7000 மக்கள் தொகை கொண்ட இஸ்டியாயியா என்ற நகரை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப் படுத்தக் கடுமையாகப் போராடி வருகின்றனர். கப்பற்படையின் கப்பல்களும், படகுகளும் கூட பொது மக்களை மீட்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன.
வடக்கு ரஷ்யாவின் சைபீரியா காடுகளிலும் தீவிரமான காட்டுத் தீ கடந்த பல வாரங்களாகத் தாக்கி வந்தது. இதில் சுமார் 15 மில்லியன் ஏக்கர் நிலம் இவ்வருடம் மாத்திரம் தீக்கிரையானதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் மிகத் தீவிரமான காட்டுத் தீ தாக்கி வருகின்றது. வடக்கு கலிபோர்னியாவில் தற்போது தாக்கி வரும் டிக்ஸியே தீ கலிபோர்னிய புவியியல் வரலாற்றில் 2 ஆவது மிகப் பெரும் காட்டுத் தீயாகப் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் தீக்கிரையான 463 477 ஏக்கர் நிலமானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விடப் பெரியது எனக் கணிக்கப் பட்டுள்ளது.