2020 ஆமாண்டு கோவிட் தொற்றுக்கள் தீவிரமடைந்து வந்து கொண்டிருந்த காலப் பகுதியில் பெரும்பாலான புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள இளைஞர்கள் அதனைக் கைவிட்டதாக சில புள்ளி விபரங்கள் வெளி வந்திருந்தன.
இந்நிலையில் தற்போது புகைப் பிடிக்கும் பழக்கம் கொரோனா பாதிப்பைத் தீவிரப் படுத்தும் என்றும் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கும் என்றும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வை ஆக்ஸ்போர்டு, பிரிஸ்டல் மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பல்கலைக் கழகங்கள் கூட்டாக இணைந்து மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளனர். 421 469 பேரிடம் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில், புகைப் பிடித்தல் கொரோனா தீவிரம் அடைவதை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மேலும் இப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப் பிடிப்பவர்கள் வைத்திய சாலையில் சேர்க்கப் படும் வாய்ப்பு 80% வீதம் அதிகமாக உள்ளதுடன் இதில் பலர் இறக்கவும் நேரிடுவதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
உலகில் கோவிட் பெரும் தொற்றின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், முதியவர்களுக்கும் பூஸ்டர் என்ற 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்த அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் அனுமதியளித்திருந்தது. இதைத் தொடர்ந்து 78 வயதாகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடெனும் சமீபத்தில் கோவிட் பெரும் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.