வாழ்க்கைக்கான போராட்டத்தில் ஆண்களுக்கு பெண் எனும் இயந்திரம் இயங்கவில்லை எனில் உலகம் எப்போதோ அழிந்து விட்டிருக்கும்,
ஆனால் பெண் வெறும் இயந்திரமல்ல; காமப்பொருளும் அல்ல. இயந்திரங்களையும் உருவாக்கும் திறன் படைத்தவர்கள். அவ்வாறான ஆப்கானிஸ்தான் அனைத்து பெண்கள் ரோபோடிக்ஸ் குழுவின் ஐந்து உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் தொடர் கல்விக்காக மெக்சிகோவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா தனது நீண்டுகால போரை 20 ஆண்டுகளுக்கு பின் முடித்துகொண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான சுதந்திரத்தையும் பறித்துவிட்டிருக்கிறது. தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்களின் எதிர்காலம் காணாமல் போயுள்ளது.
இந்நிலையில் சுமார் 20 பேர் அடங்கும் ஆப்கானிஸ்தான் ஆல் கேர்ள் ரோபோடிக்ஸ் குழுவின் இளம் பெண்கள் கனடாவில் தங்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியைத் தொடரும் உரிமைக்காக தஞ்சம் கோரி வருவதாகக் கூறப்பட்டது.
12 முதல் 18 வயதிற்குட்பட்ட 20 இளம் பெண்கள் குழு முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் ரோபோக்களின் திறமை மற்றும் போட்டிகளில் கலந்து சர்வதேச வெற்றிக்காக உலகளவில் பேசப்பட்டவர்கள். ரோயா மஹபூப் என்பவரால் ஆப்கானிஸ்தான் தொழில் நுட்ப தொழில்முனைவோரால் நிறுவப்பட்ட இந்த அணி, திறமையான இளம் பெண்களைக் கொண்டது, அவர்கள் தங்கள் படைப்புகளைப் பயன்படுத்தி ரோபோக்களை வடிவமைத்து உலகம் முழுவதும் பயணம் செய்து வாய்ப்புகளை தேடியவர்கள். அவர்கள் 2017 மற்றும் 2018 இல் அமெரிக்கா மற்றும் கனடாவில் போட்டிகளுக்குப் பல மாதங்கள் பயணம் செய்தவர்கள். இதில், அவர்கள் தங்கள் படைப்புகளுக்காக விருதுகளை வென்றதோடு அரசியல் மற்றும் பொழுதுபோக்கு பிரமுகர்களை சந்தித்தனர்.
2020ஆம் ஆண்டு கோவிட்-19 சிகிச்சைகளுக்காக இந்தக்குழு 10 மணிநேரம் இயங்கக்கூடிய வென்டிலேட்டர்களை வடிவமைத்திருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியதால் தமது எதிர்காலம் குறித்து அச்சமடைந்து கனடாவில் புகலிடம் கோரி வந்தனர். இதனையடுத்து மெக்சிகோ நகர் அண்மையில் இந்தக்குழுவைச் சேர்ந்த 5 பெண்களை மனிதாபத்துவ அடிப்படையில் 100 நிருபர்கள் குழுவுடன் மீட்டுள்ளது. விமானம் மூலம் பாதுகாப்பாக வந்திறங்கிய ஐந்து இளம் பெண்களையும் மெக்சிகோவின் துணை வெளியுறவு அமைச்சர் அன்புடன் வரவேற்ற காணொளி காட்சி இணையத்தில் பகிரப்பட்டுவருகிறது.
இதேவேளை ரோபோடிக் குழுவின் மற்றுமொரு 10 பெண்கள் கட்டார் டோகாவில் தரையிறங்கியுள்ளனர்.
ஆல்-கேர்ல்ஸ் ரோபோடிக் குழு மெக்கிசோவில் தாம் இப்போது இருப்பதற்கு நன்றி தெரிவித்ததோடு இனிமேல் நம் வாழ்வில் மேலும் பல சாதனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும், இதனால் சிறந்த வாழ்க்கைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்போம். என கூறியுள்ளனர்.
மூலம் : mymodernmat