free website hit counter

தமிழரசு இனி எப்போது மீண்டெழும்?!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்புச் செய்யப் புறப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் கட்சியொன்று தன்னுடைய பொறுப்பை மறந்து, தனியார்த்தனமும் சுயநல ஆட்டமும் ஆட முயன்றதன் விளைவை இப்போது சந்தித்து நிற்கின்றது.

தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் சனக்கூட்டத்தின் அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர், தங்களுக்குள் பதவிகளுக்காக முட்டி மோதும் போது, அந்தச் சனக்கூட்டத்தின் விடுதலை இலக்குகள் சிதைக்கப்படுகின்றன. அப்படியானதொரு நிலையை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய தமிழரசுக் கட்சி இப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் ஏதும் இல்லை. வாக்கு அரசியலின் கட்சியாக தன்னைச் சுருக்கிக் கொள்ளும் செயற்பாடுகள் மட்டுமே காணப்படுகின்றன. 

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, மத்திய செயற்குழு தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, அடுத்த தவணைக்காக எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அந்தத் திகதியில்கூட வழக்கு, விசாரணை எனும் கட்டத்தை அடையுமா என்பது தெரியவில்லை. ஏற்கனவே, எதிராளிகள் தங்களின் சமர்ப்பணங்களை மூன்று நிலைப்பாடுகளில் நின்று வழங்கியிருக்கிறார்கள் என்று கொள்ள முடியும். அதுபோல, இடையீட்டு மனுதாரராக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையைச் சேர்ந்த சின்னையா இரட்ணவடிவேல் இணைந்து கொண்டிருக்கிறார். அடுத்த வழக்குத் தவணையில் புதிய இடையீட்டு மனுதாரர்களும் இணைந்து கொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அப்படியான நிலையில், வழக்கு விசாரணைகள் இப்போதைக்கு முடிவுக்கு வரும் சாத்தியங்கள் குறைவு. அதிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலுக்கு முன்னர் வழக்கு முடிவுக்கு வந்து, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சாத்தியமாகும் வாய்ப்புக்கள் இல்லை. 

ஒரு கட்சியாக தமிழரசுக் கட்சி, தன்னுடைய யாப்பு விதிகளை முறையாக பேணி வந்திருக்கவில்லை. அதுபோல, காலத்துக்கு ஏற்ப யாப்பு விதிகளில் மாற்றங்களைச் செய்து, அதற்கான பொதுக்குழு அங்கீகாரத்தையும் பெரிதாக பெற்றிருக்கவில்லை. அவற்றையெல்லாம் தாண்டி, கட்சியின் யாப்புத் தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அநேகருக்கு எந்தத் தெளிவும் இல்லை. மக்கள் அரசியலில் ஈடுபடும் அமைப்பொன்று, சில அவசர தருணங்களில் யாப்பு விதிகளைத் தாண்டிய தீர்மானங்களை (காலத்துக்கு ஏற்ப) எடுக்க வேண்டி வரலாம். அவை, புரிந்து கொள்ளப்படக் கூடியது. ஆனால், அதனையே, தொடர் பழக்கமாக மாற்றுவது என்பது, தவறுகளை தட்டிக் கழித்துச் செயற்படும் நிலையாகும். அப்படியான சிக்கலுக்குள்தான் இப்போது மீள முடியாத வகையில் தமிழரசுக் கட்சி மாட்டியிருக்கின்றது. புதிய தலைவர் தெரிவின் போது, மேலதிகமாக 14 உறுப்பினர்களை, கட்சித் தலைவர் என்ற நிலையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு மாவை, வாக்களித்த வைத்திருக்கின்றார். அதனை, தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் ஏற்றுக்கொண்டும் அனுமதித்திருக்கிறார்கள். கட்சியை மறுசீரமைப்புச் செய்ய புறப்பட்டவர்கள், தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பின் போதே, இவ்வாறானா இடையீட்டு நபர்கள் வாக்களிக்க அனுமதித்தது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அது, ஏற்கனவே, யாப்பு விதிகளுக்கு முரணான கட்சி நிகழ்த்தி வந்த செயற்பாடுகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாகும். அப்படியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள், எப்படி கட்சி மறுசீரமைப்புக்கான உரிமையைக் கோர முடியும்?

யாப்பு விதிமுறைகளுக்கு முரணான மேலதிகமாக வாக்களித்த 14 பேர், தொடர்பிலான விடயத்தை எப்படியும் திருத்த முடியாது. எந்த நீதிமன்றத்திலும் அதனை, ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இப்போதும் அதுதான் நிகழ்ந்திருக்கின்றது. தவறை நிகழ்த்திய மாவையும், அதனை அங்கீகரித்து செயற்பட்டவர்களும் இப்போது நீதிமன்றத்தில் அந்தத் தவறை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்பது களத்தினைப் புரிந்து கொண்டு ஆடும் ஆட்டம்தான், சிலவேளை விதிகளைக் கடந்து நின்றும் ஆட வேண்டி வரலாம். ஆனால், விதிகளை மீறி நின்று ஆடுவதுதான் அரசியலின் அடிப்படை என்ற கற்பிதம், தொடருமானால் அது மக்களினால் நிராகரிக்கப்பட நேரிடலாம்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் மேலதிகமாக 14 பேர் வாக்களித்தமை தவறு என்பது இனித் திருத்த முடியாதது. அதுபோல, பொழுக்குழுவின் அங்கீகாரம் பெற்ற மத்திய செயற்குழுத் தெரிவை, கட்சிக் கட்டமைப்புக்கு வெளியில் நின்று மாற்றியமைக்க முற்பட்டமை என்பதும் அடிப்படை அரசியல் மரபுகளுக்கே முரணானது. குறிப்பாக, பொதுச் செயலாளர் தெரிவு, பொதுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதனை, ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒருசிலர் குழப்பம் விளைவித்தமைக்கு இணங்கி, பொதுக்குழு தீர்மானத்தை மாற்றுதல் என்பது, ஜனநாயக விரோதமானது. அந்த விடயமே, தமிழரசுக் கட்சி எதிர்கொண்டிருக்கும் வழக்குகளுக்கு அடிப்படைக் காரணம். பொதுக்குழு தீர்மானங்களை வெளியில் மாற்ற முற்பட்டமை தொடர்பில் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிறீதரனோ, அவரது அணியினரோ இப்போது பேசத் தயாராக இல்லை. தலைவர் தெரிவு, மத்திய செயற்குழு தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகளில் ஓர் ஒழுங்குண்டு. அவை, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வைக் காணக் கூடிய நிலையில் இருந்தவை. அதாவது, பொதுக்குழு அங்கீகரித்த விடயங்களை முழுமையாக அமுல்படுத்தி செயற்பட்டிருக்க வேண்டியது. அப்படி நிகழ்ந்திருந்தால், வழக்குகள் தொடரப்படும் வாய்ப்புக்கள் இல்லை. அதனை சீறிதரனும் அவரிடம் பொதுச் செயலாளர் பதவிக்காக அழுத்தங்களைப் பிரயோகித்தவர்களும் ஏற்கிறார்கள் இல்லை. 

கட்சிக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டமையை ஏற்க முடியாது என்று சிறீதரன் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார். அத்தோடு, தமிழர் விடுதலைக்காக போராடும் தரப்பு 'சிறீலங்கா' நீதிமன்றங்களில் கட்சியை நிறுத்தி நீதியைக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்மைய செவ்வியொன்றில் அவர் கூறியிருக்கின்றார். ஆனால், சிறீதரன் என்ன நம்பிக்கையில், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐய்யனர் ஆலயம் தொடர்பிலான அடிப்படை மனித உரிமை வழக்கொன்றில் வழக்காளியாக இருக்கிறார். அவருக்கு  சிறீலங்காவின் நீதித்துறையில் நம்பிக்கையில்லை என்றால், எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண் SC FR 186/2021) வழக்கைத் தொடுத்திருக்கிறார். தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும் என்பது அனுபவமொழி. அப்படியான நிலையாகத்தான் சிறீதரனின் சிறீலங்கா நீதிமன்றங்கள் தொடர்பிலான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும். 

சிறீதரன் தனக்கு என்று வந்ததும் பதறுவது போலவே, இப்போது சுமந்திரனும் புலம்பெயர் பெரும் வர்த்தகர்கள் தொடர்பில் புலம்புகிறார். தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து புலம்பெயர் வர்த்தகர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று அண்மைய செவ்வியொன்றின் போது, சுமந்திரன் கூறியிருக்கிறார். விடுதலை வேண்டி போராடும் சனக்கூட்டத்தின் அரசியல் சமூக தரப்புக்கள், கள நிலையை உள்வாங்கி செயற்பட வேண்டும். அதற்கு இசைவான வெளித்தரப்புக்களை இணைத்தரப்புக்களாக கொண்டு செயற்பட முடியும். அதாவது, தாயகத்தின் அரசியலை சரியாக உள்வாங்கி, அதற்கு ஒத்துழைப்பு வழக்கும் புலம்பெயர் தரப்புக்களோடு இணைந்து செயற்பட வேண்டும். ஆனால், தீர்மானங்களை தாயகமே எடுக்க வேண்டும். ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழர் அரசியலை புலம்பெயர் தேசத்திலுள்ள பல தரப்புக்களும் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன. தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாயகம் மக்கள் செயற்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. அவை, நிராகரிக்கப்படும்போது புலம்பெயர் நிகழ்ச்சி நிரலாளர்கள் ஆத்திரப்படுகிறார்கள். அவர்களின் அடுத்த தெரிவு, கட்சிகளுக்குள்ளும் அமைப்புக்களுக்குள்ளும் முக்கியஸ்தர்களை தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பிரதிபலிக்கும் நபர்களாக மாற்றுவது. அதனூடாக கட்சிகளுக்குள்ளும் அமைப்புக்களுக்குள்ளும் தங்களின் தீர்மானங்களைப் புகுத்துதல். இந்த நிலை தமிழரசுக் கட்சி தொடங்கி, தமிழத் தேசிய அரசியலில் இருக்கும் கட்சிகள் அமைப்புக்கள் பலவற்றுக்குள்ளும் உண்டு. இந்த விடயத்தை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, சரி செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், புலம்பெயர் பண முதலமைகள் மாத்திரமல்ல, தென் இலங்கை அரசியல் அதிகார சக்திகளும் தமிழ் தேசிய அரசியலை தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்க ஆட்டிவிக்கும். அந்த அச்ச நிலையை காலங்கடந்து சுமந்திரன், இப்போது வெளிப்படுத்தி இருப்பதை எப்படி நோக்குவது?

விடுதலைக்கான கட்சியாக முன்னிறுத்தும் எந்தவொரு கட்சியும் நிகழ்வுகளுக்கு பிரதிபலித்தல் என்ற நிலைக்குள் தேங்கிக் கொள்ள முடியாது. அப்படி தேங்கிவிட்டால் அந்தக் கட்சிக்கான எதிர்காலம் இருக்காது. தமிழரசுக் கட்சி அப்படியானதொரு நிலைக்குள்தான் இருந்து வருகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி கோரல் என்ற விடயங்களை முன்னுக்கு வைத்துக் கொண்டாலும், அவை தொடர்பிலான செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சியிடம் அர்ப்பணிப்பு என்பது கிடையாது. மாறாக, ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பாலும் போராட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பங்களிக்காத கூடிக் கலைதல்களைச் செய்து வருகின்றது. இன்றைக்கு அரசியல் போராட்டங்களை நோக்கி மக்களை அழைத்து வரும் ஆற்றல் எந்தக் கட்சிக்கும் இல்லை. குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு இல்லை. ஏனெனில் அந்தக் கட்சி தனக்குள்ளேயே பல கூறுகளாக பிளவுண்டு கிடக்கின்றது. அந்தப் பிளவுகள் பெரும்பாலும் பதவி பகட்டுக்காக மாத்திரமே நிகழ்ந்திருக்கின்றன. இந்த பிளவுகளைப் பிடித்துக் கொண்டு வெளித்தரப்புக்கள் மிக இலகுவாக தமிழரசுக் கட்சியை கையாள்கின்றன. அது, அந்தக் கட்சிக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் பெரும் பின்னடைவாகும். இந்தக் கட்டத்தில் இருந்து மீள்வதற்கு அந்தக் கட்சிக்காரர்கள், மனதளவில் தயாராக வேண்டும். இல்லையென்றால், தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று இருக்கும் நிலைக்கு, தமிழரசுக் கட்சி சென்று சேருவதற்கு நீண்ட காலமாகாது.  

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction