புதிய பாராளுமன்றத்தை நவம்பர் 21 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 70வது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று (12) இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான எதிர்வரும் பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் உள்ளடங்கலாக மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24 ஆம் திகதிய 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இந்த செயற்பாட்டின் ஊடாக உறுப்பினர்களை உள்ளடக்கிய பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.