ஆட்சிக்கு வந்த பின்னர் பணம் அச்சடித்து புதிய கடன்களை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ புதிதாக கடன்களை பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடன்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்திய அவர், இலங்கை மத்திய வங்கியானது காலாவதியாகும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை புதுப்பிக்கும் செயல்முறையை கொண்டுள்ளது, இது ஒரு நிலையான செயல்முறையாகும்.
தற்போதுள்ள மத்திய வங்கியின் நடைமுறைகளை கடைப்பிடித்து அரசாங்கம் பணத்தை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணம் அச்சடிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் எந்தவொரு பணத்தையும் அச்சிடவில்லை எனவும், அவ்வாறு அச்சிட முடியாது எனவும் தெரிவித்தார்.
புதிய நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு நிதியமைச்சரின் அனுமதி தேவை எனவும், தற்போதைய நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி இது தொடர்பில் கையொப்பம் இடவில்லை எனவும் அரசாங்கப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
அவ்வாறு புதிதாக அச்சிடப்படும் நாணயங்களுக்கு தற்போதைய ஜனாதிபதியின் கையொப்பம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பம் கொண்ட புதிய நாணயத்தாள்கள் ஏதேனும் உள்ளூர் சந்தையில் காணப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான பொய்யான தகவல்களுக்கு பலியாக வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (நியூஸ்வயர்)