அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணி (UPTUF) உடன் இணைந்து நாளை (17) மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
தபால் ஊழியர்களுக்கான கூடுதல் நேரக் கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் நிர்வாக மற்றும் கணக்கு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் கைரேகை இயந்திரங்கள் மூலம் வருகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் தொடங்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த வேலைநிறுத்தம் ஆரம்பத்தில் நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் இருந்து தொடங்கும் என்றும், நள்ளிரவு 12.00 மணி முதல் தபால் மற்றும் நிர்வாக அலுவலகங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான நாடளாவிய வேலைநிறுத்தமாக விரிவடையும் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 3,354 துணை அஞ்சல் அலுவலகங்களின் துணை அஞ்சல் ஊழியர்கள் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தபால் மா அதிபர் ருவன் சத்குமார உறுதிப்படுத்தினார்.
இந்த துணை அஞ்சல் அலுவலகங்களில் சேவைகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்று அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
இருப்பினும், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் UPTUF ஆகியவற்றின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அஞ்சல் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.