தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து CID மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முடித்த பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று (19) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாள் தொடர்பான பிரச்சினை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (17), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் இருந்த மூன்று கேள்விகளை மாதிரிப் பரீட்சை வினாத்தாள் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
வினாக்கள் உண்மையில் கசிந்துள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தால், தாள் குறியிடும் பணியின் போது தொடர்புடைய கேள்விகள் புறக்கணிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதாகவும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் குழு பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று கேள்விகளை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக புதன்கிழமை (18) பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குப் பதிலாக செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முழுவதையும் இரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.