free website hit counter

கலைந்து செல்லும் 'பொது வேட்பாளர்' எனும் மாய மான்! (புருஜோத்தமன் தங்கமயில்)

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல்கள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதிக்குள் ஒருநாள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. அதன்பிரகாரம் பார்த்தால், இன்னும் நான்கு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்றன. அதற்குள் தகுதியான வேட்பாளர் ஒருவரை கண்டுபிடித்து தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தி வாக்குகளை கைப்பற்றும் ஆற்றல், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமக்கும் தரப்பினரிடம் இருக்கின்றதா என்றால், அதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இப்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அந்தக் கட்சிக்குள் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட சிலர் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அதேவேளை, எம்.ஏ.சுமந்திரன், சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் பொது வேட்பாளர் விடயம் காலத்துக்கு பொருத்தமில்லாத முன்னெடுப்பு என்று கூறி வருகிறார்கள். இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் கூடவிருக்கின்றது. முதல் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி செலுத்திவிட்டு, அப்படியே மத்திய குழுக் கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களில் அநேகர் வருவார்கள். அவர்களிடம், பொது வேட்பாளர் விடயத்தை முன்வைத்து எப்படியான உரையாடலை யார் தொடங்குவார் என்பது பிரதான கேள்வி. ஏனெனில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தற்போது தாங்கி நிற்பது ஊடக முதலாளி ஒருவர். முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் மூர்க்கம் பெற்றிருந்த போது, அந்த ஊடக முதலாளியின் நடவடிக்கைகள் எந்தத் தரப்பு சார்ந்து இருந்தது என்பது கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். இறுதி மோதல்கள் காலத்தில் தமிழ்த் தேசியத்தின் ஒருங்கிணைந்த மனநிலைக்கு எதிராக செயற்பட்ட ஒருவர், தற்போது தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் ஒருங்கிணைந்த குரலையும் பொது வேட்பாளரைக் கொண்டு சர்வதேசத்துக்கு காட்டலாம் என்று கூறும்போது, அது தொடர்பில் எந்த சந்தேகமும் இன்றி, அதற்கு இசைவது எப்படியான அரசியல் புரிதல்? 

தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள சில ஊடக முதலாளிகளும் வர்த்தகர்களும் தாங்கள் விரும்பும் அரசியலை தமிழ்த் தேசியத்தின் பெயரினால் முன்னெடுக்க முயல்கிறார்கள். அவர்களிடத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் விடுதலை தொடர்பிலான எந்தவித அர்ப்பணிப்பும் இல்லை. அதனை அவர்கள் தங்களில் நடவடிக்கைகளில் வெளிப்படுத்தவும் இல்லை. மாறாக, தங்களின் தனிப்பட்ட ஆதாயம் மற்றும் தமிழ்த் தேசிய அரசியலைச் வெளியாரின் தேவைகளுக்காக சூறையாடுதல் என்கிற திட்டங்களில் போக்கில் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த பின்னடைவில், இந்த ஊடக முதலாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் கணிசமான பங்குண்டு. அவர்கள்தான், கூட்டமைப்புக்குள் வேட்பாளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சலிப்படைய வைத்தார்கள். சில வேட்பாளர்கள், இந்த முதலாளிகளின் செல்லப்பிள்ளைகளாக மாறி நின்று சக வேட்பாளர்களை இனத்துரோகியாக சித்தரித்து பேசியது எல்லாமும் நிகழ்ந்தது. ஆனால், அப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகிய வேட்பாளர்களின் அநேகர் தோல்வியடைந்தார்கள். ஒருசிலர் மாத்திரம் தப்பிப் பிழைத்தார்கள்.அதன்பிறகும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாக பிரித்தாளப்பட்டார்கள். அதனாலும், தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்து, கூட்டமைப்பு காணாமல் போனது. இன்றைக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தங்களுக்குள் கன்னைப் பிரித்துக் கொண்டு சண்டையிடுவதன் பின்னாலும் இந்த ஊடக முதலாளிகளும் வர்த்தகர்களும் கணிசமான பங்கை வகிக்கிறார்கள். அதனை ஒவ்வொரு கட்டத்திலும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களே பொதுவெளியில் பகிரவும் செய்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

ஓர் அரசியல் கட்சி, தனக்கான ஒழுக்கத்தைப் பேண  வேண்டும். குறிப்பாக தேசிய விடுதலை அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சியொன்று தன்னுடைய இலக்கை சீர்குலைக்கும் சக்திகள் எதுவாக இருந்தாலும், அவற்றை தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தமிழரசுக் கட்சியும், அதன் தலைவர்களும் தேசிய விடுதலைக்கு எதிரான எண்ணங்கொண்ட முதலாளிகளோடும், வர்த்தகர்களோடும் அவர்களின் முகவர்களோடும் இணக்கமாக பயணிக்க முற்படுவது என்பது எவ்வாறான நிலைப்பாடு, அதற்கு என்ன பெயர் சூட்டுவது? தேர்தல் மைய அரசியலுக்குள் சுருங்கிவிட்ட தமிழ் அரசியலில், ஊடக முதலாளிகளும் வர்த்தகர்களும் கட்சிக்காரர்களுக்கு ஆபத்பாண்டவர்களாக தோன்றத் தொடங்கிவிட்டார்கள். அதாவது, ஊடக முதலாளிகளைப் பகைத்துக் கொண்டால், தேர்தல் காலங்களில் தங்களை ஆதரிக்க மாட்டார்கள். அதிலும், தங்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ச்சியாக பரப்பி, தோற்கடித்துவிடுவார்கள் என்ற பயம். இந்தப் பயத்தைக் காட்டித்தான், சில ஊடக முதலாளிகள் தமிழ்க் கட்சிகளை தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வளைத்து வருகிறார்கள். ஊடக முதலாளிகள் அதனை வெளிப்படையாகவும் அதிக தருணங்களிலும் மிரட்டலாகவும் கட்சிகளை நோக்கிச் செய்கிறார்கள். இப்போது, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திற்குப் பின்னால் தமிழ்க் கட்சிகளை அணி திரட்டும் முயற்சிக்குப் பின்னாலும் அவ்வாறான அணுகுமுறை இருக்கின்றது. ஊடக முதலாளிகள் முன்னெடுக்கும் பொது  வேட்பாளர் விடயத்தை பொது வெளியில் எதிர்த்தால், அந்த முதலாளிகள் நாளைக்கு பொதுத் தேர்தல் காலத்தில் தங்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு அச்சுறுத்துவார்கள் என்கிற பயமும் பதற்றமும்தான், அந்த முதலாளிகளின் இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுப்பதற்கு காரணமாகும்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் மக்களிடம் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சில கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலருமே அதனைப் பிடித்து உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆய்வாளர்கள் கடந்த காலங்களில் முன்வைத்த ஆக்கபூர்வமான ஆய்வுகள் என்று எதனையும் சொல்ல முடியாது. அதிக தருணங்களில் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வைத்து, அதனை அறிவுபூர்வமான அரசியலாக சித்தரிக்க முயன்றவர்கள்.பத்திரிகைககளில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் மேடைப் பேச்சுக்களைத் தாண்டி அவர்களினால் எந்தவித மாற்றமும் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஆனால், அவர்களை அரசியல் கோட்பாட்டாளர்கள், சிந்தனாவாதிகள் என்ற தோரணையில், தங்களின் சுய தேவைக்காக சில அக - புறத் தரப்புக்கள் தோள்களில் ஏற்றிச் சுமந்திருக்கின்றன. அதிக தருணங்களில், அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை முன்னிறுத்துபவர்கள், விமர்சனங்களை சகித்துக் கொள்ளும் அளவுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ளவில்லை. இதனால், கருத்தியல் ரீதியான விமர்சனங்களை தனிப்பட்ட ரீதியில் உள்வாங்கி அதற்குப் பிரதிபலித்து விடயங்களைச் சுருக்கிக் கொள்கிறார்கள். அது, கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய அரசியலும் இராஜதந்திரக் கட்டமைப்பும் தன்னுடைய செயற்பாட்டை 'நிகழ்வுகள்- சம்பவங்களுக்கு' பிரதிபலிப்பது என்ற அளவில் சுருக்கிக் கொண்டது போன்றது. 

பொது வேட்பாளர் விடயம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் நிராகரிக்கப்படும் சூழல் உண்டு. ஏனெனில், தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக, தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முன்வைக்கப்படும் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமந்தால் அது, பொதுத் தேர்தலில் கட்சியின் வெற்றியை பதம் பார்க்கும். அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனவில் இருப்பவர்கள் கவனமாக இருப்பார்கள். அத்தோடு, பொது வேட்பாளர் விடயத்தை மேலெழுப்பிய தரப்பினரின் பின்னணி தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் சந்தேகத்தை எழுப்புவார்கள். அந்தக் சந்தேகங்களுக்கு திருப்தி கொள்ளும் அளவுக்கான பதிலை வழங்கி, பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் அளவுக்கு அதற்காக வாதிடும் தலைவர்கள் யாரும் தமிழரசுக் கட்சிக்குள் தற்போது இருப்பது மாதிரித் தெரியவில்லை. தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் விடயத்தை நிராகரித்தால், அதனைக் காட்டி ரெலோவும், புளொட்டும்  பொது வேட்பாளர் ஓட்டத்தில் இருந்து விலகிவிடும்.  ஏனெனில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற கட்டமைப்புக்குள் ரெலோ, புளொட் ஆகியன இருந்தாலும், அந்தக் கட்சிகளுக்கு பொதுத் தேர்தல் தொடர்பிலான எதிர்பார்ப்பு என்பது தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது சார்ந்தது. ஏதாவது ஒரு விடயத்தை முன்வைத்து மீண்டும் தமிழரசுக் கட்சியோடு கூட்டு வைத்தால் அன்றி, பொதுத் தேர்தலில் வெற்றி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும் என்பது அந்தக் கட்சிகளுக்குத் தெரியும். அதனால்தான்,  செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும், மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் இருப்பதை விரும்பினார்கள். 

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் யார் இருந்தாலும், அந்தக் கட்சி அடுத்த தேர்தல்களை குறிப்பாக, பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை தனித்தே சந்திக்க விரும்பும். அதன்மூலம், தங்களது கட்சியின் தனித்த பலத்தைக் காட்ட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அதனால்தான், உள்ளூராட்சி மன்ற அறிவிப்பு வெளியான தருணத்தில், பங்காளிக் கட்சிகளை கழட்டி விடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தது. அந்த முன்னெடுப்பில் சுமந்திரன், சிறீதரன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களின் 90 வீதமானவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதனால், எப்படியாவது தமிழரசுக் கட்சியோடு மீண்டும் ஒட்டிக்கொள்ளலாம் என்ற செல்வம் மற்றும் சித்தார்த்தனின் எதிர்பார்ப்பு இப்போதைக்கு நிறைவேறாது. ஆனாலும், பொது வேட்பாளர் விடயத்தை தமிழரசுக் கட்சி நிராகரித்தால், அதிலிருந்து தாங்களும் விலகிக் கொள்ளுவார்கள். அதனால் பொது வேட்பாளர் விடயத்தை சி.வி.விக்னேஸ்வரனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் மாத்திரமே ஊடக முதலாளிகளோடும் அரசியல் ஆய்வாளர்களோடும் சேர்ந்து தொடர்ந்தும் தூக்கிச் சுமக்கும் சூழல் உண்டு. இதில், சுரேஷின் ஈ.பி.ஆர்.எல்.எப்புக்கு மாத்திரமே சில ஆயிரம் வாக்குகளையாவது சேகரிக்கும் வல்லமையுண்டு. ஏனைய தரப்பினர் எல்லாமும் தனித்த தரப்பினர். அவர்களிடம் மக்களிடம் ஒருங்கிணைக்கும் எந்த ஏற்பாடும் இல்லை. கடந்த காலத்தில் அதனை அவர்கள் நிரூபித்ததும் இல்லை. 

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சிகளுக்குப் பின்னால், ராஜபக்ஷக்கள் - ரணிலின் வெற்றியை தெற்கில் உறுதிப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது என்ற சந்தேகம் தமிழ்ச் சூழலில் உண்டு. ஆனால், அந்தச் சந்தேகம் சார்ந்து, பொது வேட்பாளரை முன்னிறுத்த முனையும் தரப்பினர் இதுவரை தெளிவான விளக்கங்களை வழங்கவில்லை. ஒரு நியாயமான அரசியல் கோரிக்கையோ, அதுசார் நிலைப்பாடோ மக்களிடம் எந்தவித சந்தேகங்களையும் எழுப்பாத அளவுக்கு இருக்க வேண்டும். அப்படி ஏதாவது சந்தேகங்கள் எழுந்தாலும் அந்தச் சந்தேகங்கள் மீண்டும் எழ முடியாத அளவுக்கு தெளிவான பதில்கள் மூலம் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த அரசியல் கோரிக்கையோ அதுசார் நிலைப்பாடோ மக்களிடம் எடுபடாது. அப்படியானதொரு நிலையே, இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இருக்கின்றது. ஆரம்பம் முதலே பல கேள்விகளோடும் சந்தேகங்களையும் கொண்டிருக்கும் பொது வேட்பாளர் விடயம், நாள் செல்லச் செல்ல இன்னும் அதிகமான கேள்விகளையும் சந்தேகங்களையும் அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அவற்றுக்கு பதிலளிக்கும் வல்லமை, அதனை முன்னெடுக்கும் தரப்பினரிடம் இல்லாத போது, அது தானாக கலைந்து செல்லும் மாயமானாக மாறும். 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula