free website hit counter

உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது: ஜயநாத் கொலம்பகே

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு தருணத்திலும் வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது என்று வெளிவிகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

இலங்கை தொடர்பில் வெளிப்புற பொறிமுறையொன்றை தயாரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு எத்தகைய அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது நாட்டிற்கு ஒரு போதும் வெளிப்புற பொறிமுறை அவசியமில்லை. நாட்டின் உள்ளக சட்ட கட்டமைப்பின் மூலம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது அதன் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் டினால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல அறிக்கையின் போது காணாமற்போனோருக்கு நட்டஈடு வழங்கல், எல்.ரி. ரி. ஈ. சிறைக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சிக்குரியது.

மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து இலங்கையுடன் கைகோர்த்து நின்றன. மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு அந்த நாடுகளின் விசேட பாராட்டுக்கு இலக்காகியுள்ளன. பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இலங்கை அமைதியான நாடாக விளங்குகிறது.

பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தைப் பரப்பும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றே நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை சிறப்பானதாகும். அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே இலங்கையின் நோக்கமாகும். இந்நாட்டின் அமைவிடம் தொடர்பில் அதிக அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.” என்றுள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction