இலங்கையில் கொரோனா நோய்ப்பரவல் அதிகரித்துவருகின்றமையால் அடுத்து வரும் வாரங்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குமாறு பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் நேற்றையதினத்தில் இருந்து நாட்டின் பிரதான நகரச்சாலைகள் சுய முடக்கத்தை செயற்படுத்தியுள்ளன.
இலங்கை வர்த்தக சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் நாட்டில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய நகரமையங்கள் சுய முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் நேற்று 19ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொட்டகலை வர்த்தக சங்கத்தினால் கொட்டகலை மற்றும் ரொசிட்டா கடை வீதிகளை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புத்தளம் நகர மற்றும் பிரதேச சபைகளுக்குட்பட்ட வாராந்த சந்தைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.