சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
போலிச்செய்திகளை வெளியிடும் சமூக ஊடகங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தனக்கு எதிரான கருத்தினை கொண்டுள்ளவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையை எடுப்பது இது முதல்தடவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஊடகங்களிற்கு சுயதனிக்கையும் சுயகட்டுப்பாடுமே அவசியம் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, வேறொரு சக்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் உரிமையின் பக்கம் நிற்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஊடகங்களிற்கு எதிரான கட்டுப்பாடுகள் அச்சுறுத்தல்கள் சுயதணிக்கைகள் ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
ஊடகங்களை ஒடுக்கிய ஒவ்வொரு ஆட்சியாளரினதும் அரசாங்கத்தினதும் தலைவிதி எவ்வாறு அமைந்தது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என எதிர்கட்சி தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
அனைத்து ஊடகங்களிற்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.