நாட்டு மக்களின் பாதுகாப்புக் குறித்து தூர நோக்குள்ள எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“கடந்த 2 வருடங்களாக நாடு முகங்கொடுத்துள்ள தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கு தன்னிச்சையாகவும் தனித்தனியாகவும் தீர்வுகளைத் தேடுவதற்கு பதிலாக கூட்டு முயற்சியின் மூலம் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதன் முக்கியதுவத்தை மதிப்பளிப்போம். குறைந்த பட்சம் இந்தக் கொரேனா பேரழிவின் அவசர நிலையில் கூட, அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை கூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று புதன்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் இன்றைய நிலையானது, அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பல நாடுகள் தங்கள் மக்களின் பாதுகாப்புக்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை ஆரம்பித்துள்ளன. அவற்றில் எந்தவொரு திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. அதற்கு பதிலாக, தினசரி அடிப்படையில் சிற்சில தலைப்புகளை முன்னிலைப்படுத்தி, அன்றைய தினத்துக்கான திட்டத்தை மாத்திரமே செயற்படுத்துகிறது. குறிப்பாக எமது நாட்டில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள், கொரோனா மரணங்களை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு மகிழ்ச்சியடைகின்றமை மோசமான செயற்பாடு என்பதுடன், இதற்கான விலையை அரசாங்கம் நிச்சயமாக செலுத்த நேரிடும்.” என்றுள்ளது.