இலங்கை கிரிகட் அணியின் முன்னாள் கேப்டனும், துடுப்பாட்ட வீரருமான ஹஷான் திலகரத்ன இலங்கை மகளிர் கிரிகட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக SLC உறுதிப்படுத்தியது.
ஜூன் 1 ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் டிசம்பர் 31, 2021 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனக்காலம் நீடிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. SLC இந்த ஆண்டின் இறுதியில் பல ஒப்பந்தங்களை புதுப்பிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்லகரத்ன இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார் என கிரிகட் ஆர்வலர்கள் எதிர்வுகூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட 2022 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுத் தகுதிகளுக்கான அணியைத் தயார்படுத்துவது அவரது முக்கிய கடமையாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் சில சுற்றுப்பயண போட்டிகள் ஏற்பாடு செய்ய எதிர்பார்த்து இருப்பதையும் SLC உறுதிப்படுத்தியுள்ளது. கொரொனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் T20 உலகக் கோப்பைக்கு பின்னர் இலங்கை பெண்கள் அணி எந்த சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-அடையாளம்-