இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வீரர்களில் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்த மெடில்டா கார்ல்சன், நேற்று நடைபெற்ற குதிரைச் சவாரி தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மெடில்டா கார்ல்சனின் குதிரை எட்டாவது தடை தாண்டலை பாய தவறியதால் அவர் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். இந்த தோல்வியுடன் இலங்கையில் இருந்து பல கனவுகளுடன் சென்ற அனைத்து வீரர்களும் எதுவித பதக்கங்களும் இன்றி ஏமாற்றத்துடன் நாடு திரும்புகின்றனர்.
டக்கன் வைட் (1948) மற்றும் சுசந்திகா (2000) ஆகியோருக்கு பின்னர் இலங்கை சார்பாக எந்த விளையாட்டிலும் ஒலிம்பிக் பதக்கங்கள் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட நேரடி தகுதியைப் பெற்ற முதல் இலங்கை வீராங்கனையான மெடில்டா கார்ல்சன், தனிநபர் பாய்தல் குதிரைச் சவாரி (Jumping Individual) என்றழைக்கப்படும் போட்டியில் களமிறங்கினார். இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியில் மொத்தமாக 73 வீரர்கள் களமிறங்கினர். இதில் முதல் 30 இடங்களைப் பெறும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இலங்கைக்கு பதக்கம் ஒன்றை வென்றெடுக்கும் கனவுடன் சுமார் 142 கோடி ரூபா பெறுமதியைக் கொண்ட சொப்பின் வா (CHOPIN VA) என்ற குதிரையுடன் மெடில்டா கார்ல்சன் களமிறங்கினார். இவரது குதிரை எட்டாவது தடை தாண்டலின் போது பாய மறுத்ததையடுத்து தோல்வியுடன் மெடில்டா களத்தில் இருந்து வெளியேறினார்.
எதுஎவ்வாறாயினும், ஒலிம்பிக் வரலாற்றில் குதிரைச் சவாரி போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றும் முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட மெடில்டா கார்ல்சன் ஆவார்.