பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிசிபி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திரங்களான சக்லைன் முஷ்டாக் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் எதிர்வரும் நியூசிலாந்து தொடருக்கான இடைக்கால பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான நிர்வாகக் குழு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தெரிவித்துள்ளது.
"நான் எனது குடும்பத்தை விட்டு கணிசமான நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கும் என்று கருதி நான் அந்த பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.'' என மிஸ்பா-உல்-ஹக் குறிப்பிட்டுள்ளார்.
"நேரம் சரியானதாக இருக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் வரவிருக்கும் சவால்களுக்கு நான் சரியான மனநிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை, புதிதாக யாராவது நுழைந்து முன்னெடுத்துச் செல்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.'' என அவர் மேலும் கூறினார்
2019 ஆம் ஆண்டில் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மற்றும் அவரது ஒப்பந்தத்தில் ஒரு வருடம் மீதமுள்ள வக்கார் யூனிஸ், மிஸ்பாவின் முடிவை அடுத்து தனது ராஜினாமாவை பிசிபிக்கு வழங்க முடிவு செய்தார்.
"மிஸ்பா தனது முடிவையும் எதிர்காலத் திட்டங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட பிறகு, நாங்கள் ஒன்றாக பதவி வகித்ததால், ராஜினாமா செய்வது எனக்கு ஒரு நேரடியான ஒன்றாக இருந்தது, ஒரு ஜோடியாக கூட்டாக வேலை செய்தோம், இப்போது ஒன்றாக விலகுகின்றோம்," என்று யூனிஸ் கூறினார்.
2021 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 உறுப்பினர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.