லங்கன் பிரீமியர் லீக்கைப் போன்று வெளிநாட்டு வீராங்கனைகளையும் உள்ளடக்கி பெண்களுக்கான டி20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.
இந்த லீக் போட்டிக்கு ‘Lanka Women’s Super League T20’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2022 பெண்களுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு அணியை பலப்படுத்துவதற்காக இந்த டி20 லீக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.
நான்கு அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் ஒரு அணியில் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகளுடன், மொத்தமாக 16 பேர் இடம்பெறுவார்கள். அத்துடன், 13 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரினை தம்புள்ளை அல்லது பல்லேகலையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.
இதனிடையே, குறித்த டி20 லீக்கை நடத்துவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை அனுசரணையாளர்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி செப்டெம்பர் 7ஆம் திகதி பிற்பகல் 01.00 மணியுடன் நிறைவடையும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.