free website hit counter

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள்(5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின், ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் ஜோடி சேர்ந்தனர். சைம் ஆயுப் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபகர் ஸமான் 35 பந்துகளில் 46 ரன்கள்(பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பாகிஸ்தான் அணி கடைசி 62 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இந்திய அணித் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணிக்கு தொடக்கமே சுமாராக அமைந்தது.

கடந்த ஆட்டங்களைப் போலவே அதிரடியைத் தொடருவார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், துணை கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். இதனால், இந்திய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவிப்புக்குள்ளானது.

அதன்பின்னர், கைகோர்த்த திலக் வர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டனர். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி - ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அஃப்ராரிடம் வீழ்ந்தார்.

மறுபுறம் அதிரடியைக் காட்டிய திலக் வர்மா 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்து அசத்தினார். முடிவில், இந்திய அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula