கேப்டன் தோனி உள்பட சென்னை வீரர்கள் மைதானம் முழுவதும் சுற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. பின் விளையாடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.
இதையடுத்து, போட்டி முடிந்த பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். கேப்டன் தோனி உள்பட சென்னை வீரர்கள் மைதானம் முழுவதும் சுற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து, கேப்டன் தோனி மற்றும் சக வீரர்கள் இணைந்து மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு டீ-ஷர்ட், பந்து உள்ளிட்ட பொருட்களை வழங்கி தங்களது நன்றியினை வெளிப்படுத்தினர்.
அப்போது, ஒருபுறம் பேட்டி அளித்துக் கொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தோனி தன் அருகில் வருவதைக் கண்டதும் திடீரென கேமராவை விட்டு விலகி, தோனியிடம் நேராக ஓடினார். அங்கு தோனியிடம் பேனாவை கொடுத்து தன் சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க தோனி, சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். பின்னர், இருவரும் பரஸ்பர அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.