இலண்டன் வெம்பிளி மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற ' யூரோ - 2020 ' வெற்றிக் கோப்பைக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பலமான அணிகளான இங்கிலாந்தும், டென்மார்க்கும் களமாடின. ஆரம்பத்தில் விறு விறுப்பாக அமைந்த ஆட்டம் நேரம் செல்லச் செல்ல பதற்றம் நிறைந்த ஆட்டமாக மாறியது.
ஆட்டம் தொங்கிய 30 வது நிமிடத்தில் டென்மார்க் அணி முதலாவது கோலை சிறப்பாக அடித்தது. அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக ஆடிய இங்கிலாந்து அணி 39வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பொன்றினைச் சரியாகப் பயன்படுத்தி, தனது முதலாவது கோலை போட்டது.
அந்தக் கணத்திலிருந்து டென்மார்க் அணியின் ஆட்டத்தில் பதற்றம் தொடங்கியது. அதனால் வீரர்கள் தப்பாட்டம் ஆடத் தொடங்கினர். புள்ளி விபரங்களின்படி, ஆட்டம் முழுவதிலும் 21 தவறுகளை டென்மார்க் அணி செய்தது. அதேவேளை இங்கிலாந்து அணி 10 தவறுகள் விட்டிருந்தது.
ஆட்டம் முழுவதும் இங்கிலாந்து அணியின் பந்துக் கடத்தல் மிகச் சிறப்பாக இருந்தது. மொத்த 730 பந்துக் கடத்தல்களை அந்த அணி செய்திருந்த நிலையில், எதிர்த்தாடிய டென்மார்க் அணி 534 பந்துக் கடத்தல்களை மட்டுமே செய்திருந்தது. ஆயினும் இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் ஆடிய நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
அதன் பின்னதாக வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் 14' வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. டென்மார்க்அணி அதனைச் சமன் செய்யச் தீவிரமாக விளையாடிய போதும், மேலதிக நேரங்களின் இறுதிவரை அதனால் மேலதிய கோல்களைப் போட முடியவில்லை.
இதற்கு முன்னை ஆட்டமென்றில், செக் குடியரசு அணியுடன் விளையாடும் போது அழகாக ஆடிய டென்மார்க் அணி, இந்த ஆட்டத்தில் அதனைத் தொலைத்திருந்தது. முடிவில் 2: 1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று, எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை, இத்தாலி அணியை எதிர் கொள்கிறது.