பாதுகாப்பு உயிர் குமிழியை மீறியதனால் நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோரை இலங்கை கிரிக்கட் சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டர்ஹாமில் அணியின் பாதுகாப்பு உயிர் குமிழியை மீறியதாக மூவரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதனையடுத்து மூவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்தத் தொடரிலுள்ள வீரர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்பது தெளிவாகிறது.
பொது இடத்தில் மெண்டிஸ் மற்றும் டிக்வெல்ல இருவரிற்கிடையில் நடைபெற்ற உரையாடலை மூன்றாம் நபர் காரினூள் இருந்தபடி எடுத்த காணோளி சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்து வருகின்றது. இரு வீரர்களும் தங்கள் முகக்கவசங்களை கைகளில் வைத்திருந்தாலும் அவற்றை அவர்கள் அணியவில்லை. அந்த மூவரும் ஒன்றாக சென்றதாக ஒப்புக் கொண்டதாக எஸ்.எல்.சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டு வீரர்கள் மூவரும் வெளிப்பயணம் மேற்க்கொண்டதாக குறித்த தகவல் கிடைத்ததும் எஸ்.எல்.சி யின் மருத்துவக்குழுவினர் அவர்களை தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் இலங்கையணியினர் இங்கிலாந்துடனான டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய சோகத்தில் இலங்கை ரசிகர்கள் இருக்கும் தருணத்தில் இவர்கள் மூவரினதும் செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.