புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் 2 சதங்களை விளாசியிருந்தார். முதல் போட்டியில் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றதுடன், வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருாநாள் தொடரொன்றை வெற்றிக்கொண்டது. 33 வயதான சமரி அத்தபத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 758 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேத் மூனி 752 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். தென் ஆபிரிக்காவின் லோரா வோல்வார்ட் 732 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.
சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக , ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.