சிவபெருமானுக்கு சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சோம சுந்தரர், சோமநாதர், சசிதரர், சசிசேகரர் எனும் நாமங்கள், சந்திரனுடன் தொடர்பட்டு வரும் பெயர்களாகும். இவற்றுள் சோமசுந்தரர் என்னும் நாமம் மேலும் சிறப்பு வாய்ந்தது.
சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று பொருள். சந்திரனுக்கும் சோமன் என்ற ஒரு பெயர் உண்டு. கார்த்திகை மாதத்தில் வரும் முக்கியமான விரதங்களில் ஒன்று, கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்பெறும் கார்த்திகைச் சோமவாரம் சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகிய இந்த நாளில், முதன்முதலாக சந்திரன் விரதம் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாக இந்த விரதம், சோமவார விரதம் எனப் பெயர் பெற்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்கள் எட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் கார்த்திகை சோம வார விரதமும் ஒன்றாகும். தட்சனின் சாபம் காரணமாக, கொடிய நோயால் துன்பப்பட்ட சந்திரன், தன் சாபம் நீங்கி நோய் குணமாக சிவனை வேண்டி, பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் என்ற இடத்தில் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் விரதம் அனுஷ்டித்தான். அவனது விரத அனுஷ்டானத்தில் மகிழ்ந்த சிவபெருமான், தட்சனின் சாபத்திலிருந்து விமோசனம் அளித்தார். சிவனின் அருளால் நோய் நீங்கப் பெற்ற சந்திரனள், நவக்கிரக தேவர்களில் ஒருவரானார். சந்திரனுக்கு , திங்கள், சோமன் எனும் பெயர்களும் உண்டு. சந்திரனின் பெயரில் சோமவார விரதம் என அழைக்கப்பெறும் இந்த நாளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு, நற்கதியைக் கொடுக்க வேண்டும் எனச் சந்திரன் பிரார்த்தித்தான்.
சோமவார விரதத்தின் பலனாக, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறும். தாயாருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளும் நீங்கும். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும் எனச் சொல்லியுள்ளார்கள்.