திருவனந்தபுரம்: பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் சிலர் ஆத்திரத்தில் ஆசிரியரின் காரில் பட்டாசுகளை கொளுத்திப் போட்ட சம்பவம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா மாநிலத்தில் தற்போது பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மலப்புரம் மாவட்டம் உள்ளது, திரூரங்காடி என்ற பகுதி. இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
தேர்வறையில் சில மாணவர்கள் காப்பி அடித்து தேர்வினை எழுத முயன்றுள்ளனர். அப்போது, தேர்வறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர், மாணவர்கள் தேர்வை காப்பியடித்து எழுத அனுமதிக்கவில்லை. தேர்வறையில் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால், காப்பி அடிக்க முடியாத மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்தனர். காப்பி அடிக்க முடியாத மாணவர்கள், தேர்வு முடிந்த பிறகும் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். தங்களது தேர்வறைக்கு வந்த கண்காணிப்பாளர், தனது காரில் புறப்பட முயன்றபோது அவரது காரின் மீது பட்டாசுகளை கொளுத்திப் போட்டனர்.
பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதற, ஆசிரியர் பதறிப்போனார். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக ஆசிரியருக்கு காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக, கேரள போலீசார் மாணவர்கள் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.