சென்னையில் இன்று மாலை வரை மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று
வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மிக அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருகிறது. இடைவேளையின்றி பெய்து வரும் மழையால், மழைநீர் வெளியேறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
மழை நீரை வெளியேற்றுவதற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தொடர் பணியாற்றி வருகின்றன. இருப்பினும், இயற்கையின் வேகத்திற்கு அரசு எந்திரங்கள் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதை, தொடர் மழையின் பாதிப்பு உணர்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னை மக்களுக்கு புதிய எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் தாம்பரத்தில் 232.9 மி. மீட்டர், சோழவரத்தில் 220 மில்லி மீட்டர், எண்ணூரில் 205 மில்லி மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 184 மில்லிமீட்டர், செங்குன்றத்தில் 180 மில்லி மீட்டர், நுங்கம்பாக்கத்தில் 158.5 மில்லிமீட்டர், மீனம்பாக்கத்தில் 116 மீட்டர் மழை பதிவாகி உள்ளது.