மதுரையில் புது நத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு
வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் கலைஞர் நினைவு நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு ஆகும் செலவு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில், கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்திலான நவீன பொது நூலக கட்டடம் கட்ட பொதுப்பணித் துறையின் விரிவான திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், ரூ.99 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியும், நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்நூல்கள், இணைய வழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 5 கோடியும் என மொத்த செலவினத் தொகை ரூ.114 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
