free website hit counter

'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த புதிய போர்க்கப்பல் தற்போதுள்ள கப்பல்களை விட 7 மடங்கு பெரியதாகும்.

இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடந்து வந்தது.

4 கட்டங்களாக நடந்து வந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் இன்று முறைப்படி படையில் சேர்க்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான கட்டுமான செலவு ரூ.19,341 கோடி ஆகும். இந்த கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கு மேற்பட்டோர் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.

பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இவ்வளவு பெரிய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. இன்று, விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவை புதிய நம்பிக்கையால் நிரப்பியுள்ளது.

விக்ராந்த் போர்க்கப்பல் பெரியது மற்றும் பிரமாண்டமானது, விக்ராந்த் தனித்துவமானது, விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்திய கடற்படை, அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம் இது. உள்நாட்டு உற்பத்தியான விமானந்தாங்கி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நகரும் நகரம். விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது. வளர்ச்சி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction