சில நாட்களாக நடந்த தொடர் இராணுவ மோதல்களுக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கின்றன.
இரு நாடுகளும் "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் " ஆபரேஷன் சிந்தூர் " இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யான் மார்சூஸ்" ஐத் தொடங்கியது. இந்தச்சமரில் பாகிஸ்தானும் இந்தியாவும் பரஸ்பரம் இராணுவ தளங்களை குறிவைத்தத் தாக்குதல்களை ஆரம்பித்தன. கடந்த புதன்கிழமை இருவு தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஏறக்குறைய இதே எண்ணிக்கையில் இந்தியத் தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அறிய வருகிறது.
இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கியதை இந்தியா மிகச் சுருக்கமான செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவும் உறுதிப்படுத்தியது. இது தொடர்பில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, பாகிஸ்தானில் உள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்தியாவில் உள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை அழைத்தார். இன்று இந்திய நேரப்படி 5:00 மணி முதல் இரு தரப்பினரும் நிலத்திலும், வான்வழி மற்றும் கடலிலும் அனைத்து சண்டைகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்தப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதலை, பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் இஷாக் தார் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.