free website hit counter

கரூர் பலி குறித்து அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் - முதல்வர் ஸ்டாலின்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் தவெகவுக்கு எதிராக பல்வேறு காணொலிகள் இணையத்தில் பதிவிடப்பட்டு, வேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில், அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியிருப்பதாவது:

”கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள், இன்னும் என் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும் துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.

செய்தி கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்த முடிக்கிவிட்டு அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்றிரவே கரூர் சென்றேன்.

குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவம் குறித்து முழுமையான உண்மையான காரணத்தை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

இதனிடையே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை பார்த்து வருகிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தொண்டர்கள், அப்பாவி மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை அவர்கள் தமிழ் உறவுகள். சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் சூழலில், பொறுப்பற்ற விஷமத்தன்மையான கருத்துகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற கூட்டங்களை வரும்காலங்களில் நடத்த வேண்டுமென்றால், அதற்கான விதிகளை வகுக்க வேண்டியது நமது கடமை. நீதிபதியின் அறிக்கை கிடைத்தவுடன் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும்.

மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது, மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை வேறுபாடுகள், தனிமனித பகைகள் என அனைத்தையும் விளக்கி வைத்துவிட்டு, அனைவரும் மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு முன்னோடியாகதான் இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் வரும்காலங்களில் நடக்காமல் தடுப்பது அனைவரின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula