free website hit counter

கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் மருந்து ஏற்றுமதி 103 சதவீதம் வளர்ச்சி - மத்திய அரசு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டின் மருந்து ஏற்றுமதி 2013-14-ம் ஆண்டில் இருந்து 103% வளர்ச்சி அடைந்துள்ளது.
நாட்டின் மருந்து ஏற்றுமதி 2013-14-ம் ஆண்டில் இருந்து 103% வளர்ச்சி அடைந்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் ரூ.90,415 கோடியாக இருந்த  மருந்து ஏற்றுமதி, கடந்த  2021-22-ம் ஆண்டில் ரூ.1,83,422 கோடியாக  அதிகரித்துள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மருந்து ஏற்றுமதியில் சாதனை படைத்து அத்துறையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய ஆண்டாக அமைந்தது. கடந்த  8 ஆண்டுகளில் ஏறக்குறைய ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

உலகளவில் நிலவிய வர்த்தக இடையூறுகள் மற்றும் கோவிட்  தொடர்பான மருந்துகளுக்கான தேவை குறைந்த போதிலும் கடந்த 2021-22-ம் ஆண்டில் மருந்து ஏற்றுமதிகள் நேர்மறை வளர்ச்சியைத் தொடர்ந்தன. 15,175.81 மில்லியன் அமெரிக்க டாலர் உபரித் தொகையுடன் நாட்டின் வர்த்தக சமநிலை  சாதகமாகத் தொடர்கிறது.

மருந்துகளுக்கான விலை, போட்டித்தன்மை மற்றும் நல்ல தரம் ஆகியவற்றின் காரணமாக, உலக அளவில் இந்திய மருந்து நிறுவனங்கள் முத்திரை பதித்துள்ளன. உலகின் 60 சதவீத தடுப்பூசிகள் மற்றும் 20% மலிவு விலை  மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உலகளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தையும், அதன் மதிப்பில் 14-வது இடத்தையும் பெற்றுள்ளது. 

இந்திய மருந்துத் துறையின் தற்போதைய சந்தை அளவு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

2013-14-ம் ஆண்டைக் காட்டிலும், கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி  பியூஷ் கோயல் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகின் மருந்துகள் சேவை மையமாக உருவெடுத்து வருவதாக கூறியுள்ளார்.

முந்தைய நிதியாண்டு 2020-21-ல் செயல்திறனை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான கட்டமைப்புகள் காரணமாக, நாட்டின் மருந்து ஏற்றுமதியில்  மீண்டும் 2021-22-ம் ஆண்டில் ஆரோக்கியமான செயல்திறனைப் பதிவு செய்தன. மருந்து உற்பத்தித் துறையின்  வெற்றிக்குப் பின்னால் நமது உலகத் தரம் வாய்ந்த உற்பத்தித் திறன், வலுவான உள்கட்டமைப்பு, செலவு-போட்டித்தன்மை, பயிற்சி பெற்ற மனித மூலதனம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள்  ஆகியவை அடங்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction