இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக். 6) நடைபெற்றது.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு சிறிதுநேரம் தடைபட்டது. இதனையொட்டி, மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதனிடையே, வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, சீல் வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையில் (அக். 9) வாக்கு எண்ணிக்கை அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.