இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் கோவிட் -19 இன் டெல்டா திரிபு வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மெல்ல குறைந்துவரும் நிலையில் கொரோனா வைரஸ்சின் டெல்டா பிளஸ் திரிபு தொடர்பான நோய்க்காரணிகளுடன் சில மாநிலங்களில் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் மத்திய சுகாதார அமைச்சகம் இந்திய தடுப்பூசிகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதன்போது டெல்டா பிளஸுக்கு எதிரான கோவிட் தடுப்பூசிகளின் தாக்கம் குறித்த கேள்விக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் பதிலளித்தபோது :
கோவிட் தடுப்பூசி திட்டத்தில் நாம் தற்போது பயன்படுத்தும் இரண்டு இந்திய தடுப்பூசிகளும் அதாவது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகின்றன. ஆனால் மூன்றாவதாக பயன்படுத்தும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியையும் சேர்த்து அவை தயாரிக்கும் ஆன்டிபாடி டைட்டர்களின் விகிதத்தின் அளவு குறித்து விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என கூறியுள்ளார்.
மேலும் இந்தியா உட்பட 80 நாடுகளில் டெல்டா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 9 நாடுகளில் டெல்டா பிளஸ் காணப்படுகிறது; இந்தியாவில் டெல்டா திரிபுடன் 22 வழக்குகள் காணப்படுகின்றன. இவை ஜல்கான் (மகாராஷ்டிரா) மற்றும் கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளன எனவும் மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.